ஐ.எஸ்.தீவிரவாத இயக்க நிறுவனர் என்று ஹிலாரி கிளிண்டன் மீது டிரம்ப் கடும் தாக்கு

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி பிரசாரம் செய்கின்றனர்.

புளோரிடாவில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி தலைவர் டொனால்டு டிரம்ப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

‘ஓர்லாண்டோவை பாருங்கள். சான்பெர்னார் டினோவை பாருங்கள். உலக வர்த்தக மையத்தை பாருங்கள். உலகம் முழுவதும் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உற்று நோக்குங்கள். தற்போது நாம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலை எதிர் நோக்கியுள்ளோம்.

ஆனால் இங்கு ஏற்பட்ட இழப்புகள் கிளிண்டனுக்கு இழப்பாக தெரியவில்லை. ஏமாற்று வேலையில் ஈடுபட்டிருக்கும் ஹிலாரி கிளிண்டனுக்கும் இழப்பு அல்ல. இவருக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் நிறுவனர் என்ற விருது வழங்கலாம் என காட்டமாக பேசினார்.

டிரம்ப்பின் இதுபோன்ற பேச்சுகள் அவரது குடியரசு கட்சியினருக்கே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஹிலாரியை தற்போது ஏமாற்றுக்காரர் என கூறியுள்ளார். அதற்கு முன்பு சாத்தான் என்றார்.