நேபாள நாட்டின் புதிய பிரதமராக மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா பதவியேற்றார்

நேபாள பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.பி.ஒலி பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த மாதம் 24-ம் தேதி பதவி விலகினார். இதையடுத்து புதிய பிரதமரை விரைவில் தேர்வு செய்ய வேண்டும் என அதிபர் பித்யா தேவி பண்டாரி அழைப்பு விடுத்திருந்தார்.

0302bd233b024100b13e35837f60ffc6_r900x493

இந்நிலையில் பிரதமர் பதவிக்கான வேட்புமனுவை பாராளுமன்ற செயலகத்தில் நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்-சென்டர்) கட்சியின் தலைவர் பிரசண்டா செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவை நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷேர் பகதூர் தேவுபா முன்மொழிந்தார். பிரண்டாவின் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் கிருஷ்ண பகதூர் மஹாரா மனுவை வழிமொழிந்தார். 

இதையடுத்து பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாட்டின் புதிய பிரதமராக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரசண்டா தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தமுள்ள 573 உறுப்பினர்களில் 363 பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்நிலையில், நேபாள நாட்டின் புதிய பிரதமராக பிரசண்டா இன்று பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். நேபாள அதிபர் மாளிகையில் அதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. 

மன்னராட்சி கடந்த 1990-ம் ஆண்டு ஒழிக்கப்பட்ட பிறகு கடந்த 26 வருடங்களில் 24-வது பிரதமராக பிரசண்டா பதவியேற்றுள்ளார். 

61 வயதான பிரசண்டா, இதற்கு முன்னர் 2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2009-ஆம் ஆண்டு மே வரை அந்நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.