நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி கொண்டுவரப்படவுள்ள வரி திருத்தம் தொடர்பான சட்டமூலத்திற்கு மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட எவருக்கும் கைகளை உயர்த்தி ஆதரவு வழங்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனால், மக்கள் விடுதலை முன்னணியின் அதனை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரத்திற்கு முன்னர் இரண்டு பிரதான கட்சிகள் தனித்தும் இணைந்தும் நாட்டை ஆட்சி செய்தன. இவர்கள் கையாண்ட பொருளாதார கொள்கைகளின் பிரதிகூலங்களையே நாடு தற்போது எதிர்நோக்கி வருகிறது.
கடன் சுமை அதிகரிப்பு, அரச வருவாய் குறைந்துள்ளமை, சமூக குற்றங்கள் அதிகரித்துள்ளமை, மக்களின் வருமான முரண்பாடுகள் அதிகரித்துள்ளமை போன்ற பாரதூரமான பிரதிகூலங்களுக்குள் நாட்டை கொண்டு சென்றுள்ளனர்.
அரச வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதே தற்போது பிரதான நெருக்கடியாக இருந்து வருகிறது. 2000ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியில் 15.6 வீதமாக இருந்த அரச வரி வருமானம் கடந்த வருடம் 11.6 வீதமாக குறைந்துள்ளது.
நாட்டின் திறைசேரிக்கு கிடைக்கும் நிதி படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த அரசாங்கத்தை போலவே தற்போதைய அரசாங்கமும் வருமான குறைவு பிரச்சினையை எதிர்நோக்கி வருகிறது. இதனால், அரசாங்கத்திற்கு இருக்கும் ஒரே தீர்வு வரி வருமானம்.
வரிகள் மூலம் அரசாங்கம் 90 வீதமான வருமானத்தை பெற்று வருகிறது. கடந்த காலத்தில் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் நாட்டில் இருந்த தொழிற்சாலைகளை விற்பனை செய்தமை அல்லது மூடியது ஆகியனவே இதற்கான காரணங்கள்.
இந்த நிலையில், அரச வருமானம் வரி வருமானத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. நாட்டின் தேசிய மொத்த வருமானத்தை 11.6 வீதத்தில் இருந்து 14.6 வீதமாக அதிகரிக்க போவதாக அரசாங்கம் கூறியது.
அரசாங்கத்திற்கு இருக்கும் ஒரே பதில் வரி வருமானத்தை அதிகரிப்பதாகும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.