அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை மாநகர முதல்வர் சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பரின் விசேட சிந்தனைத் திட்டத்தின் கீழ் சுமார் இரண்டு கோடி ரூபா செலவில் கல்முனை நகரில் அமைக்கப்பட்டு வருகின்ற ஐக்கிய சதுக்க நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன் நிமித்தம் கடந்த சில தினங்களாக முதல்வர் அங்கு களத்தில் நின்று வேலைகளை மேற்பார்வை செய்து வருகின்றார்.
இதன்போது ஐக்கிய சதுக்கத்தின் ஒரு அங்கமான வாகனத் தரிப்பிடத்தின் நிர்மாண வேலைகள் நிறைவுறும் நிலைக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை அங்கு முதல்வரினால் நிழல் தரும் அலங்கார மரங்கள் நடப்பட்டன.
இதில் மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ், மாநகர சபையின் சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.ஏ.மஜீத், உள்ளூராட்சி உதவியாளர் எம்.எம்.சர்ஜூன், முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக், விசேட ஆலோசகர் லியாகத் அபூபக்கர் உட்பட மற்றும் பலரும் பங்கேற்றிருந்தனர்.
கல்முனை மாநகர முதல்வர் நிசாம் காரியப்பர் அவர்களின் கருத்திட்டத்தில் உருவான ஐக்கிய சதுக்க நிர்மாணத்திற்கான முதற்கட்ட பணிக்கு அவரது வேண்டுகோளின் பேரில் ஆசிய மன்றத்தின் கொய்கா செயற்திட்டத்தின் கீழ் 5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.
ஐக்கிய சதுக்க திட்டத்தின் கீழ் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் பார்வையாளர் அரங்கு அமைவதுடன் வர்த்தகத் தொகுதி, உணவகம் என்பவற்றுடன் வாகனத் தரிப்பிடம் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இரவு நேரத்திலும் கல்முனை நகரம் பொது மக்கள் மற்றும் பயணிகளின் பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றியமைக்கப்படவுள்ளது.