வரலாறு நெடுகிலும் காத்தான்குடி அறியப்படும் – ராசி முஹம்மத் ஜாபிர்

ராசி முஹம்மத் ஜாபிர் 

 

குமார் எங்கள் வீட்டைத்தட்டும்போது நேரம் இரவு பதினொன்றைத்தாண்டியிருந்தது.எனது தந்தை கதவைத் திறந்தார்.

‘சேர் என்னைத் தேடுகிறார்கள்” குமாருக்கு நன்றாக வியர்த்திருந்தது.

எனக்கு அப்போது புரியவில்லை.எனது தந்தைக்குப் புரிந்துவிட்டது.

“சரி உள்ளே வா.”குமாருக்கு சாப்பாடு போட்டோம்.இந்தியப்படைகள் அந்நேரம் அடிக்கடி வந்து முஸ்லீம்களின் வீடுகளைச் சோதிப்பார்கள்.குமாரை எங்கள் வீட்டு சீலிங்குக்குள் மூன்று நாள்கள் ஒழித்துவைத்திருந்தோம்.

குமார் எங்கள் வீடு கட்டும் மேசன்.புலிகளுக்கும் அவருக்கும் தொடர்பு கிடையாது.எல்லாத்தமிழர்களும் புலிகள் என்று பிழையாகப் புரியப்பட்ட காலம் அது.கிழக்கிலங்கையில் எத்தனையோ குமார்களுக்கு எத்தனையோ அப்துல்லாஹ்க்கள் அடைக்கலம் கொடுத்திருந்தார்கள். ஆபத்தில் உதவியிருக்கிறார்கள். இலங்கை,இந்திய ராணுவத்தால் அனாவஷ்யமாகத் தேடப்படும் குமார்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள்.வீட்டிற்கு வேலை செய்யவரும் குமார்களை அடுப்பங்கரைக்குள், கோழிக்கூட்டுக்குள், பாய் ராக்கைக்குப் பின்னால், ஒழித்து வைத்து காப்பாற்றியிருக்கிறார்கள். பசியால் வாடி வீட்டடியில் வருபவர்களுக்கு உணவும்,படுக்கையும் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் குமார்கள், தொழுது கொண்டிருந்த அப்துல்லாஹ்க்களைக் கொன்றுவிட்டார்கள். அவர்களின் அழிவும் அன்றே எழுதப்பட்டுவிட்டது. அதன் பின்னர் நல்ல குமார் கெட்ட குமார் என்ற வேறுபாடு இல்லாமல் போய்விட்டது.

இரண்டு பாரிய வரலாற்றுத் தவறுகளை விடுதலைப் புலிகள் விட்டிராவிட்டால் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஓரளவிற்கு வெற்றி பெற்றிருக்கலாம்.
முதலாவது இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது.

இரண்டாவது இலங்கை முஸ்லீம்களை எதிரிகளாக்கிக்கொண்டது.
போராட்டங்கள் ஆயுதங்களோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை.அதே நேரம் போராட்டக்குழுக்கள் தங்கள் பலத்தையும்,கவனத்தையும் ஒரு எதிரியின் மீதுதான் காட்டுவார்கள்.பல எதிரிகளை வைத்திருப்பது அவர்களின் பிரதான எதிரியைவிட்டும் அவர்களின் கவனத்தைக் கலைத்துவிடும். அயல்வீட்டுக்காரனோடு முரண்பட்டால் எதிரி அயல்வீட்டானை உபயோகித்து உள்வீட்டுக்குள் வந்துவிடுவான் என்பதனால் தங்கள் அயலவர்களை ஆதரளவாளர்களாக்குவதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.இதனை சர்வதேச அரசியலில் neighborhood policy என்பார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருந்த முதல் உள்நாட்டு அயலவர்கள் முஸ்லீம்கள்.மிகவும் நெருங்கிய வெளிநாட்டு அயலவர்கள் இந்தியா,அதிலும் தமிழ்நாடு.இந்த இரண்டு அயலவர்களையும் அவர்கள் எதிரிகளாக் ஆக்கிக்கொண்டார்கள்.

தமிழீழப்புலிகளின் வளர்ச்சிக்கு வெகுவாக தமிழ்நாடு உதவியது.தமிழ் நாட்டிலே வைத்து ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது டில்லிக்கும் தமிழ் நாட்டிற்கும் இருக்கும் தொடர்பை வெகுவாகப்பாதித்துவிட்டது.புலிகளின் வளர்ச்சியில் அது பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
அடுத்தது இலங்கை முஸ்லீம்களைப் புலிகள் எதிரிகளாகப் பார்க்க ஆரம்பித்தமை. எந்த வேளான்மையிலிருந்து அவர்களுக்கு முஸ்லீம்கள் சோறு போட்டார்களோ அந்த வேளாண்மையில் இருந்து முஸ்லீம்களை விரட்டியடித்தார்கள்.அவர்களுக்கு சோறாக்கிக் கொடுத்தவர்களின் வயிறுகளைக்கிழித்து சிசுவை சுவற்றில் அறைந்து கொன்றார்கள்.அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களை கழுத்தறுத்து கொலை செய்தார்கள்.இறுதியில் அவர்கள் அழிந்தும் போனார்கள்.

புலிகள் முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்து விட்டது அநியாயம் என்பதைத் தாண்டி எட்டப்பனின்,புரூடஸின் துரோகம் அன்றி வேறில்லை. அவர்கள் போராட்டம் புனிதமிழந்தது. அநியாயமிழைக்கப்பட்டவனின் கண்ணீர் திரைச்சீலையைக் கிழித்துக்கொண்டு ஆண்டவனை அடையும்.அவர்கள் அழிந்து போனார்கள்.இந்த பாரிய வரலாற்றுத் தவறுகள் அவர்களை அழித்துவிட்டது.

காத்தான்குடி வரலாறு நெடுகிலும் அறியப்படும்.துரோகம் எவ்வாறு போராட்டங்களைப் புஷ்வாணமாக்கிவிடும் என்று.