கூட்டு எதிர்க்கட்சியின் தற்போது மேற்கொண்ட பாதயாத்திரை ஒரு ஒத்திகை மாத்திரமே எனவும் அடுத்த முறையில் வீதியில் இறங்குவது செல்வதற்கு அல்ல எடுத்துச் செல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பாதயாத்திரை முடிவில் கொழும்பில் இன்று நடந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அடுத்த முறை எடுத்துச் செல்லவே வீதிக்கு வருவோம். இது ஒத்திகை மாத்திரமே, 20 ஆண்டுகள் ஆளும் கட்சியில் இருந்தவர்களுக்கு எதிர்க்கட்சியில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் காட்ட வேண்டும்.
நாங்கள் தயார். நீங்கள் தயார் என்றால், நீங்கள் எதனை கேட்கின்றீர்களோ அதனை நாங்கள் பெற்றுத்தருவோம் என்றார்.
இது மைத்திரியையும், ரணிலையும் அகற்றுவதற்கான முதல்கட்ட முயற்சி,
கடந்த ஐந்து நாட்களாக கூட்டு எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட பேரணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் அரசாங்கத்தை அகற்றும் முயற்சியின் ஒரு கட்டமே என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட ஐந்து நாள் பேரணி இன்று கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் முடிவடைந்தது. இதனையடுத்து ஆதரவாளர்கள் மத்தியில் மஹிந்த ராஜபக்ச உரையாற்றினார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஐந்து நாள் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதாக குறிப்பிட்டார்.
பொதுமக்கள் இன்று எதிர்நோக்கும் வாழ்க்கை செலவு அதிகரிப்பு மற்றும் இந்தியாவுடன் செய்துக்கொள்ளப்படவுள்ள எட்கா உடன்படிக்கை உள்ளிட்ட விடயங்களை கண்டித்தே இந்த பேரணி நடத்தப்பட்டது.
இதேவேளை ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தின் உறுப்பினர்களை கைதுசெய்து மக்களை பிழையான வழியில் திசைதிருப்ப முனைவதாக குற்றம் சுமத்தினார்.