ஹக்கீமே ! அடிவேர்களையே பிடிங்கி விட்டு புதிய மரங்களை நாட்டித்தான் என்ன பயன்?

13669426_1851256635107676_8999305923046353541_o_Fotor

ஆலமரம் சாய்ந்த போது (அஷ்ரஃப்)
அழுது புரண்ட நான்..
ஹக்கீம் தலைமையிலான மரம் 
சாய்ந்தாலும் சரிக்கப்பட்டாலும்
ஒரு கணம் கூட கலங்க மாட்டேன்

ஹக்கீம் நீங்கள் என்னை 
மன்னித்துக் கொள்ளுங்கள்!

அடிமரம் சாய்ந்த போது
அதன் விழுதான உங்களையே
தலைமையாய் ஏற்ற எம் சமூகம்
இன்று தலையில் கை வைத்து 
அடித்து,அழுது புலம்புகிறது
தாம் செய்த தப்புக்காக.!

ஹக்கீம் நீங்கள் என்னை 
மன்னித்துக் கொள்ளுங்கள்!

வீட்டுக்கு வீடு மரம் நடும்
உங்கள் திட்டம் 
நாட்டுக்கு சிலவேளை
நல்லதாக இருக்கலாம்…!
நம் சமூகத்துக்கோ
அது ஒரு சாபக்கேடு

ஏனெனில், எங்களை 
உங்கள் மனதிலிருந்து
அடியோடு நீங்கள் 
எப்போதே பிடிங்கி 
எறிந்து விட்டீர்கள்..!
அது எங்களுக்கு ஞாபகம்
ஆனால்.. உங்களுக்கு ஞாபக மறதி! 

ஹக்கீம் நீங்கள் என்னை 
மன்னித்துக் கொள்ளுங்கள்!

மரமா நடுகிறீர்கள்? 
சில அடிவேர்களையே 
பிடிங்கி விட்டு
புதிய மரங்களை நாட்டித்தான் 
என்ன பயன்?

விதைப்பதெல்லாம் 
கன்றுகளாவதும் இல்லை!
நடுவனவெல்லாம்
தளைக்கப் போவதும் இல்லை!

ஹக்கீம் நீங்கள் என்னை 
மன்னித்துக் கொள்ளுங்கள்!

நீங்கள் இன்று ஆலமரமாக 
மாயை கொள்ளலாம்..
ஆனால்.. உங்கள் அடியில்
நிழல் காய்வோர் யார்?
போராளிகளா? தொண்டர்களா?
கட்சி தொடக்கத்தினரா?
இல்லவே இல்லை…!

விஷத்தை துப்பி எறியும் 
விரியனை விஞ்சிய 
பாம்புகளும்..
சமூகத்தை அரைக்கும்
கறையான்களும் 
புற்றுகளை உருவாக்கி
உங்களின் அடியில் அல்லவா
நிழல் காய்கின்றன?

ஹக்கீம் நீங்கள் என்னை 
மன்னித்துக் கொள்ளுங்கள்!

சமூகத் தொண்டன் சத்திராதி,  
உண்மைப் போராளி உதவாக்கரை
இவையே இன்று கட்சி யாப்பில் 
திருத்தபட்ட சில ஷரத்துகள்..! 

ஆயிரம் அம்புகளை 
நெஞ்சில் சுமந்த
அமரர் அஷ்ரஃப்
அடுத்தவனைப் பழி தீர்த்ததாக 
எனக்குத் தெரியாது!
ஆனால், அம்புகள்  
எய்யப்படாமலே
பழி தீர்க்கப்படும் இன்றைய காலம்
கண்டு என் மனம் கனக்கிறது!

ஹக்கீம் நீங்கள் என்னை 
மன்னித்துக் கொள்ளுங்கள்!

இரண்டும் இரண்டும் நான்கு என
சரியாகச் சொல்பவன் முட்டாள்!
இரண்டும் இரண்டும் ஐந்து என
உங்களுக்காக பிழையாகச் 
சொல்பவன்
கெட்டிக்காரன்…  
இதனையே உங்கள் 
மேல்சபையின் கண்டேன்!
அவர்கள் புத்திசாலிகள்தான்!

அடிமட்ட தொண்டன்,
போராளி, சமூக விசுவாசி
அனைவரும் இன்று
அடிமாட்டு விலைக்கு 
சந்தையில் விலை போக…

அன்றாடம் உங்களை 
ஒட்டிப் பிழைத்து
சாமரம் வீசி சந்தனம் 
தெளிக்கும் சிலரோ
இப்போது சுப்பர் மார்கட் 
நிலையில்..!

ஹக்கீம் நீங்கள் என்னை 
மன்னித்துக் கொள்ளுங்கள்!

எல்லா தப்புகளையும் நீங்கள் 
செய்யவில்லைதான்!
ஆனால், தப்புகளுக்கு நீங்கள்
தாராள அங்கீகாரம் வழங்குவதுதானே 
மகா தப்பு!

கரு நாகங்களும் 
கறையான்களும்
இன்று உங்களுக்கு 
குரு நாதர்கள்! 
ஆனால்… 
அவைகளால் உங்கள்
நிழலில் கட்டப்படும்  
புற்றுகள் உங்களை 
நிச்சயம் அடியோடு 
சாய்த்து விடும்.. 
எச்சரிக்கிறேன்!

ஹக்கீம் நீங்கள் என்னை 
மன்னித்துக் கொள்ளுங்கள்!

நீங்கள் இன்று ஆயிரம் மரங்களை 
நாட்டி விடலாம்
ஆனால், ஆயிரமாயிரம் 
மனங்களை உங்களால் 
ஆட்கொள்வது இனி கஷ்டம்! 

நீங்கள் சொன்னதற்காக 
இன்று மரம் நடுவோர்
நாளை இது ஒரு சாபத்தின் கேடு என
கூறினாலும்.. அது சரித்திரமாகும்
இருந்து பாருங்கள்!

இறுதியாக… நீங்கள் 
மக்களை வென்று
அவர்கள் மனங்களில் 
குடியேறுங்கள்..
அதற்காக முதலில் 
கூனிகளையும் சகுனிகளையும்
கூட வைப்பதனை 
விட்டு விடுங்கள்..

மக்களுக்காக எதனையும் 
செய்யுங்கள்…
மாக்களுக்காக 
எதனையுமே செய்யாதீர்கள்!

ஹக்கீம் நீங்கள் என்னை 
மன்னித்துக் கொள்ளுங்கள்!

 கவிஞர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்