மு.காவுடன் நெருக்கமான கள்ள உறவு வைத்துள்ள ஹமீதுக்கு இது சமர்ப்பணம்… !

 

13874848_624855157680533_1980134120_n_Fotorஜுனைதீன் மான்குட்டி     

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீத் குரல்வழியாக இணையத்தளங்களில் பதிவொன்றை மேற்கொண்டிருக்கின்றார். 

தற்போதைய காலகட்டத்தில் பேசுபொருளாக இருக்கும் அரசியலமைப்பு, அதிகாரப் பகிர்வு (Devolution of Power) தொடர்பில் அவரது கருத்துக்களும் வியாக்கியானங்களும் அமைந்திருந்தன. 

திறந்தவெளிப் பல்கலைக்கழக சட்டபீட மாணவர்கள் கற்கும் பாடமொன்றின் அதிகாரம் ஒன்றை (Chepter) மனனம் செய்து,  வாசகர்களுக்கு அதனை அப்படியே அச்சொட்டாக தந்திருக்கின்றார். உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு இது ஒரு பயனுள்ள பதிவு. 

கல்முனைக்குடியைப் பிறப்பிடமாகக்கொண்ட வை.எல்.எஸ்.ஹமீத், முன்னர் ஆங்கில உதவி ஆசிரியராக பணிபுரிந்த காரணத்தினால், அவரது பேச்சில் ஆங்கிலச் சொற்கள் இடைக்கிடை இழையோடி நிற்கின்றன. 

கனேடியப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பேராசிரியரும், தந்தை செல்வாவின் மருமகனுமான ஏ.ஜே.வில்சன், கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் என்.செல்வகுமரன் ஆகியோர் அதிகாரப்பகிர்வு தொடர்பில் இவரது கருத்துக்களைக் கேட்டிருந்தால் மலைத்துப் போயிருப்பர்.

அதிகாரப் பகிர்வு என்ற சொற்றொடருக்கு அதிகாரப் பரவலாக்கம், அதிகாரப் பகிர்ந்தளிப்பு என்ற சொற்றொடர்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் கல்முனையின் அரசியல் பேராசான் ஹமீத், “தத்துவப்பேரளிப்பு” என்ற இன்னுமொரு சொல்லைத் தவறவிட்டமை அவரது ஞாபகமறதியைக் காட்டுகின்றது.  

தான் மனனம் செய்த விடயங்களை மறக்கும் ஹமீத் எவ்வாறு மக்களவைக்குச் சென்று, அவர்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூறப் போகின்றார்? 

முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் கல்முனைக் காரியாலய உதவியாளராக அவ்வேளை கடமையாற்றிய ஹமீத், அஷ்ரபின் கோவைகளைக் (File) காவுவதிலும், சீர்செய்வதிலும் கெட்டிக்காரராக இருந்தவர். அஷ்ரபின் மறைவின் பின்னர் எவ்வாறோ முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடத்துக்குள் நுழைந்துகொண்டார். கட்சிக் கூட்டங்களில் எப்போதுமே ஒரு சண்டப்பிரசங்கியாகவே அவர் தன்னைக் காட்டிக்கொண்டார். மு.கா தலைவர் ஹக்கீமுடன் பலதடவைகள் முரண்பட்டு பின்னர், ஒழுக்காற்று  நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். சமூகத்துக்காக பேசியதாலேயே தான் கட்சியிலிருந்து வீசப்பட்டதாக இவர் கதை அளந்தபோதும், இற்றைவரையில் முஸ்லிம் சமூகத்துக்காக எதையுமே செய்யவில்லை. 

நானும் கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்டவனே. ஏதாவது வேலைக்கு கல்முனைக் காரியாலயத்துக்கு தொலைபேசி அழைப்பை நாம் மேற்கொண்டால் பாத்ரூமில் இருப்பதாகவே அவரிடமிருந்து பதில் வரும். அவ்வாறான அர்ப்பணிப்புள்ள சேவையாளனே இந்த ஹமீத்.

மக்கள் செல்வாக்கில்லாத செல்லாக்காசாகி இருந்த ஹமீதை கட்சியின் செயலாளராக்கி, பல்வேறு சந்தர்ப்பங்களில் நிறுவனத்தலைவர் பதவிகளையும் கொடுத்து, அவரை அரவணைத்தவரே அமைச்சர் றிசாத். இப்போது கூட அவர் வழங்கிய பதவியிலேயே தமது காலத்தைக் கழிக்கின்றார். 

ஹமீதுக்கு தேசியப்பட்டியல் எம்.பி பதவி மீது பேராசை வந்தது. மக்கள் செல்வாக்கில்லாத இந்த மகோன்னத புருஷர் பாராளுமன்றத்துக்குச் சென்று, தனது வீரப்பிரதாபங்களை காட்டலாம் என கனவுகண்டார். அது நிறைவேறாத போது, அமைச்சர் றிசாத் மீது இப்போதெல்லாம் வசைமாரி  பொழிவதுதான் அவரது பிரதான வேலையாக உள்ளது. 

அதிகாரப்பகிர்வால் முஸ்லிம்களுக்கு ஏற்படும் பாதிப்பைப் பற்றியும், தனது பதிவில் கூறியிருக்கும் ஹமீத், அந்த விடயத்திலும் அமைச்சர் றிசாத்தை மட்டுமே குறிவைத்துத் தாக்குகின்றார். அவரது பழிவாங்கும் எண்ணத்தை இது வெளிப்படுத்துகின்றது. 

முன்னர் சென்ற இடமெல்லாம் மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத்தை புகழ்ந்தும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை இகழ்ந்தும் பேசிவந்த இவர், இப்போது ஹக்கீமைப் பற்றி ஒரு வார்த்தைதானும் தூசிப்பதில்லை. ஏனெனில் மு.காவுடன் அவருக்கு நெருக்கமான கள்ள உறவொன்று ஏற்பட்டிருக்கின்றது. றிசாத்தை அரசியலிலிருந்து வீழ்த்துவதற்காக அவர் வியூகம் அமைத்து செயற்படுகின்றார். 

அதிகாரப்பகிர்வு தொடர்பில் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், முஸ்லிம் எம்.பிக்களையும், முஸ்லிம் அரசியல்வாதிகளையும் அவர் ஒட்டுமொத்தமாகக் குறைகூறி இருந்திருந்தால் “ஹமீத் ஒரு நேர்மையானவர்” என்று நாம் கருத முடியும். ஆனால் தேசியப்பட்டியல் கிடைக்காததால் றிசாத் மீது அவர் வீண்பழிகளைச் சுமத்தியும், தனது வக்கிரபுத்தியைத் தொடர்ந்தும் வெளிப்படுத்துவதையுமே நாம் வேதனயுடன் பார்க்கின்றோம்.