சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை முடக்கியமை, சாட்சியங்களை அழித்தமை போன்ற செயல்களில் முன்னாள் பொலிஸ் உயரதிகாரிகள் ஏழு பேர் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்று புலனாய்வுப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர்கள் இருவரிடமும், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவரிடமும், ஏனைய பொலிஸ் உயரதிகாரிகள் இருவரிடமும் புலனாய்வுப் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர் எனவும், அவர்கள் ஏழு பேரும் விரைவில் கைதுசெய்யப்படலாம் எனவும் பொலிஸ் தலைமையகத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
லசந்தவின் படுகொலை தொடர்பில் விசாரணை நடத்திவந்த புலனாய்வுப் பொலிஸாரை விசாரணைகளிலிருந்து விலக்கியமை, படுகொலை தொடர்பான மிகவும் முக்கிய தகவல்களைக் கொண்டிருந்த லசந்தவின் டயறியைத் தொலைத்தமை, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் குழுக்களுக்கு நிர்ப்பந்தம் செய்தமை உட்பட இவர்கள் ஏழு பேரின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.