கார்ப் பந்தயம் நடைபெற்ற இடம் உயிர்காக்கும் மைக்ரோ வைத்தியசாலைகள் புறப்படும் இடமாக மாறியுள்ளது: பிரதமர்

ranilமூன்று வருடங்களுக்கு முன்னர் லம்போகினி கார்ப் பந்தயம் நடைபெற்ற காலி முகத்திடல், தற்போது உயிர்காக்கும் மைக்ரோ வைத்தியசாலைகள் புறப்படும் இடமாக மாறியுள்ளது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இலங்கையில் ஆரம்பிக்கப்படும் அம்பியூலன்ஸ் சேவையை தொடக்கி வைக்கும் நிகழ்வு இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. 

காலி முகத்திடலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

இதன்போது, 88 அம்பியூலன்ஸ்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதோடு, இதற்காக 1100 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 

1214781357Untitled-1

அத்துடன், இதன் பலனாக 550 இலங்கையர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. 

இந்த நிகழ்வில் கருத்து வௌியிட்ட பிரதமர் “ராஜபக்ஷ காலத்தில் இரவு நேரப் பந்தயங்களுக்காக பயன்படுத்தப்பட்ட காலி முகத்திடலில் இருந்து நல்லாட்சி அரசாங்கத்தில் மைக்ரோ வைத்தியசாலைகள் இன்று வௌியே செல்வதாக குறிப்பிட்டார். 

இந்த சிறிய வைத்தியசாலைகள் வௌியே செல்வது உயிரைக் காக்கவே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், இந்திய அரசாங்கம் எமக்கு வழங்கியுள்ளது அதி உயர் தரத்திலான அம்பியூலன்ஸ் சேவை என இதன்போது குறிப்பிட்ட பிரதமர், நோயாளியை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வரை அவரது உயிர்காக்கத் தேவையான அனைத்து வசதிகளும் இதிலுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.