ஆப்பிரிக்காவின் சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிசு விமான நிலையத்தின் அருகே விமானப்படை தளம் உள்ளது. இங்கு ஆப்பிரிக்க ஒன்றிய படைகள் முகாமிட்டு பயிற்சி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை இந்த விமானப்படை தளத்தின் நுழைவு வாயிலை நோக்கி இரண்டு வாகனங்கள் வேகமாக முன்னேறின.
அவற்றை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்த முயன்றபோது ஒரு வாகனம் நுழைவு வாயிலில் வெடித்துச் சிதறியது. மற்றொரு வாகனம் அருகில் உள்ள சோதனைச்சாவடி அருகில் வெடித்தது. அப்பகுதியில் இருந்தவர்கள் பல அடி தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டனர். சக்திவாயந்த குண்டுகள் வெடித்ததால் அப்பகுதியில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளிப்பட்டது.
பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 13 வீரர்கள் பலியானதாகவும், 5 பேர் காயமடைந்ததாகவும் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு அல் சகாப் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக அல்ஜசீரா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.