முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் பிணை விண்ணப்பத்தை செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த வழக்கு நேற்றைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மேலும், குறித்த பிணை விண்ணப்பம் தொடர்பில் எதிர்ப்புகள் இருப்பின் அதனை முன்வைக்குமாறு, அதில் பிரதிவாதிகளாக கூறப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சட்டமா அதிபர் உள்ளிட்ட குழுவினருக்கும் அழைப்பானை அனுப்பப்பட்டுள்ளது.
பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில், சாட்சிகளை மறைக்க முற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, அனுர சேனாநாயக்க கைதுசெய்யப்பட்டார்.
பின்னர் அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தன்னை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு, சட்டத்துக்கு முரணானது என உத்தரவிடுமாறு, அனுர சேனாநாயக்கவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, இதனை மீளாய்வு செய்து, தன்னை பிணையில் செல்ல அனுமதிக்குமாறும் அவர் அதில் கோரியுள்ளார்.