இணைந்த எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏற்பாடு செய்துள்ள பாத யாத்திரை திட்டமிட்டப்படி எதிர்வரும் 28 ஆம் திகதி கண்டியிலிருந்து ஆரம்பிக்கப்படுமெனவும், தான் பாத யாத்திரைக்கு தலைமை வகிக்கவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
பாத யாத்திரை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் பாதயாத்திரைக்கு தடைவிதிக்கும் என தான் எதிர்பார்க்கவில்லையெனவும், அது ஜனநாயகத்துக்கு முரணானதெனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 28 ஆம் திகதி ஸ்ரீதலதா மாளிகை முன்னாலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான பாத யாத்திரை ஆகஸ்ட் 1 திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.
கொழும்பில் பொதுக்கூட்டத்துடன் பாதயாத்திரை நிறைவுபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் எங்கு நடாத்தப்படும் என்ற விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அநேகமாக காலிமுகத்திடலில் நடாத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாத யாத்திரையில் பெருமளவில் முஸ்லிம்களைப் பங்கு கொள்ச் செய்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கு பொறுப்பாளராக குருநாகல் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குருநாகல் அமைப்பாளருமான அப்துல் சாத்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதயாத்திரையில் கலந்துகொள்வதற்காக முஸ்லிம் மக்கள் பெருமளவு ஆதரவு வழங்கி வருவதாக சுதந்திரக்கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.