பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் நீதிமன்றத்தின் அணுகுமுறை குறித்து பொதுநலவாய அமைப்பின் சட்டப் பிரிவிடமிருந்து ஆலோசனை பெறவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடக மறுசீரமைப்பு தொடர்பான தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்த இந்நிகழ்வின் போது, ஊடக வளர்ச்சி தொடர்பான பொது அறிக்கையொன்றில் கைச்சாத்திடும் வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர், ‘கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் கண்டறிவதற்கான ஆணைக்குழுவொன்றை நியமிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக’ கூறினார்.
அத்துடன், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஊடகங்கள் வாயிலாகவே தான் அறிந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.