சப்ரகமுவ, தென் , வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போதைய ஆளுநர்களுக்கு பதிலாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது.
சப்ரகமுவ மாகாண ஆளுநராக பதவி வகித்து வரும் அமைச்சர் டிலான் பெரேராவின் தந்தையான மாஷல் பெரேரா ஆளுநர் பதவியில் இருந்து விலக இணங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இவருக்கு பதிலாக முன்னாள் பிரதியமைச்சர் ஹேமால் பெரேரா ஆளுநராக நியமிக்கப்பட உள்ளார்.
அதேவேளை, தென் மாகாண ஆளுநராக பதவி வகித்து வரும் ஹேமகுமார நாணயக்காரவுக்கு தூதுவர் பதவியை வழங்கிவிட்டு, முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவுக்கு தென் மாகாண ஆளுநர் பதவியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வடமேல் மாகாண ஆளுநராக பணியாற்றும் அமரா பியசீலி ரத்நாயக்கவுக்கு பதிலாக லலித் திஸாநாயக்க நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய, வடக்கு மாகாண ஆளுநர்களை தவிர கிழக்கு, மேல் மற்றும் ஊவா மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனிடையே இலங்கை தொழிலாளர் கட்சியின் தலைவரான வர்த்தகர் ஏ.எஸ்.பி. லியனகேவுக்கு ஆளுநர் பதவியை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.