சுலைமான் றாபி
முஸ்லிம்களின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்றால் கிழக்கு கிழக்காகவும், வடக்கு வடக்காகவும் இருக்க வேண்டும் என கிழக்கின் எழுச்சியின் தலைவர் வபா பாறுாக் நேற்றைய தினம் (19) சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இடம்பெற்ற கிழக்கின் எழுச்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்:
நாட்டில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பல பக்க முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் தீர்வுத் திட்டம் என்பது எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயா, ஜனாதிபதி மைத்திரிபால ஆகியோர்கள் கையெழுத்து இடும் ஒரு ஒப்பந்தம் அல்ல. அது மக்கள் முன் தெரியப்படுத்தப்பட வேண்டிய யாப்பு மாற்றம்.
மேலும் சம்பந்தன் ஐயா தற்போது வடகிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம்களின் ஆதரவினை கோருகின்றார். அவ்வாறு ஆதரவு தந்தால் முஸ்லிம்களில் ஒருத்தரை முதலமைச்சராக்குவதற்கு அவர் துணிந்துள்ளார். இதன் தார்ப்பரியமே அண்மைய நாட்களில் சம்பந்தன் ஐயாவின் கோரிக்கைக்கு சாதகமான பதில்கள் திரைமறைவில் வழங்கப்பட்டுக் கொண்டு வருகின்றன.
இவ்வாறானதொரு நடவடிக்கையானது வடகிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம்கள் ஆதரவு என்கின்ற கருத்தை முஸ்லிம் தலைமைகள் வெளியில் காட்டுவதற்கான வாய்ப்பாக வந்து விட்டது.
அதே போன்று18ம் திருத்த சரத்துக்கு எவ்வாறு பணம் வாங்கிக் கொண்டு ஆதரவு வழங்கினார்களோ, அதே போன்று வாக்களித்தது போல வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு அரசியல் தலைமைகள் விலை கொடுத்து வாங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆனால் வடகிழக்கு எந்த காரணத்திற்காகவும் இணையக் கூடாது என்பதில் நாம் மிகவும் தெளிவாகவுள்ளோம். விஷேடமாக இதனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிற்கும், அதனது தலைமைக்கும் இச் சந்தர்ப்பத்தில் உயர் செய்தியாக பிரகடனம் செய்கின்றோம்.
சம்பந்தன் ஐயாவிற்கு விஷேட வேண்டுகோள்.
முஸ்லிம்கள் தனி தேசியம் என்பதனை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையிலேயே எல்லா தீர்வுத் திட்டங்களும், பேச்சுவார்த்தைகளும் எமக்கு கிடைக்கு கிடைக்க வேண்டும். முஸ்லிம்கள் தமிழ் பேசும் சிறு இனக்குழு அல்ல! தனிக் கலாச்சாரம், தனி நிலத்துடன் சுயநிர்ணய உரிமை கொண்ட ஒரு தேசியம்.
எனவே தமிழ் மக்கள் எவ்வகையான கெளரவ அந்தஸ்த்துக்கள் உள்ளதோ அவைகள் அனைத்தும் முஸ்லிம்களும் சமமாகப் பெற்ற ஒதேசியம் என்பதனை அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
இதே வேளை கிழக்கின் வாழும் முஸ்லிம்களின் உரிமைகளை அடகுவைத்து ஹக்கீம் செயற்படுவதாகவும், இதனை இல்லாமல் செய்வதற்கே கிழக்கின் எழுச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் தலைவர் வபா பாறூக் குறிப்பிட்டார்.