20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் விடுதலை குறித்து பரிசீலிக்கக் கோரிய நளினியின் மனு தள்ளுபடி!

nalini20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பதால் தன்னை விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமெனக் கோரி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டு நளினி உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனைக் கைதிகளாகச் சிறையில் உள்ளனர்.

இந்த நிலையில், தான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் தன்னை விடுதலை செய்ய வேண்டுமென கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசின் சிறைத் துறைக்கும் உள்துறை செயலருக்கும் மனு செய்தார். 1994ஆம் ஆண்டில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ஒன்றின்படி, 20 ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர்களை விடுதலை செய்யலாம் என்று இருப்பதைச் சுட்டிக்காட்டி இந்த மனுவை அவர் அளித்திருந்தார்.

அந்த மனு மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இது குறித்து முடிவெடுக்க உத்தரவிட வேண்டுமெனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை நளினி தாக்கல் செய்தார்.

இதற்குப் பதிலளித்த தமிழக அரசு, நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என பதிலளித்தது.

அந்த மனு மீது இன்று தீர்ப்பளித்த நீதிபதி சத்யநராயணா, இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், இந்த மனுவைத் தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தார்.

உச்ச நீதிமன்ற வழக்கில் வெளியாகும் தீர்ப்பின் அடிப்படையில் நளினியை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டுமென்றும் நீதிபதி தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.