யாழ் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து முக்கிய உயர்மட்ட பேச்சுவார்த்தை!

2116089604snapshot40

கடந்த சனிக்கிழமை யாழ் பல்கலைகழகத்தில் விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து இன்று முக்கிய உயர்மட்ட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. 

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கயந்த கருணாதிலக்க மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்னம் ஆகியோர் உட்பட மாணவர்களும் குறித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர். 

இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்னம், 

எதிர்வரும் காலங்களில் தமிழ்-சிங்கள மாணவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துதல் மற்றும் பல்கலைக்கழகத்தின் கற்றல் நடவடிக்கைகளை சீராக முன்னெடுத்துச் செல்லுதல் என்பன குறித்து குறித்த கலந்துரையாடலின் போது கருத்துப் பரிமாறப்பட்டதாக கூறினார். 

அத்துடன் இந்த மோதல் சம்பவமானது திட்டமிட்டு மேற்கொண்ட ஒரு இனவாத சம்பவம் அல்ல என்றும், ஒரு சிலரினால் மேற்கொள்ளப்பட்டதே என்றும் கொழும்பில் இருந்து வந்த அமைச்சர்கள் குழுவினர் விளங்கிக் கொண்டதாகவும் கூறினார். 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாளைய தினம் முதல் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.