யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவத்தை அடுத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கல்விச்செயற்பாடுகள் மீளவும் நாளை புதன் கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம் தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த சம்பவம் துரதிஷ்டமான சம்பவம் என்றும் குறித்த மோதல் இடம்பெற்று ஒரு மணிநேரத்திற்குள்ளேயே நிலமை சுமூகமாக கொண்டுவரப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் இனி வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்வதாக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் கூறியுள்ளதாகவும் துணைவேந்தர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் மூதவை உறுப்பினர்கள் மற்றும் அனைத்துப் பீட பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களுடன் நடந்த சந்திப்பில் விரைவில் கல்விச் செயற்பாட்டை தொடங்க அவர்கள் முன்வந்துள்ள நிலையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கல்விச் செயற்பாட்டை நல்லெண்ண அடிப்படையில் நாளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில் மருத்துவபீடம் மற்றும் சித்த மருத்துவ பீடம் என்பன நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், அதனை அடுத்து விவசாயப் பீட பரீட்சைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதனை அடுத்து ஏனைய கல்விச் செயற்பாடுகளையும் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள தீப்பொறியை தாம் அணைத்துள்ளபோதும் அது இன்னொரு பக்கத்தில் எரிந்துகொண்டிருப்பதாகவும் ஊடகங்கள் இந்த விடயத்தில் பொறுப்புடன் நடந்து பல்கலைக்கழகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை வெளிமாவட்ட மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.