நாட்டில் ஆட்சியமைப்பதற்கு சிறுபான்மை மக்களினதும் மத்திய தர கொள்கையுடையவர்களினதும் ஆதரவு அவசியமானதாகும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானத்திற்கமையவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் தேசிய அரசு ஏற்படுத்தப்பட்டது. எனவே கட்சிக்குள்ளிருந்து அரசை விமர்சிக்க முடியாது.
விமர்சிக்க வேண்டுமானால் சுதந்திரக் கட்சியை விட்டு வெ ளியேற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் தனியொரு குடும்பத்தினரே கட்சியின் முடிவுகளையும் நாட்டின் முடிவுகளையும் மேற்கொண்டனர்.
ஆனால் இன்று இந்த நிலை மாறிவிட்டது. அனைவருக்கும் சுதந்திரமாக செயற்பட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு கூடி உத்தியோகபூர்வமாக எடுத்த முடிவுக்கமையவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசு அமைக்கப்பட்டது.
எனவே சுதந்திரக் கட்சிக்குள் இருந்து கொண்டு இன்றைய அரசை விமர்சிக்க முடியாது.
பொது எதிர்கட்சியினருக்கு அரசை விமர்சிக்கும் அதிகாரம் கிடையாது. அந்த அருகதையும் இல்லை. அதேபோன்று சுதந்திரக் கட்சிக் காரர்களுக்கு விமர்சிக்க முடியாது. அது கட்சியை மீறும் செயலாகும்.
அவ்வாறு விமர்சனம் செய்யவேண்டுமானால் சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேற வேண்டும். கட்சிக்குள் இருந்து இரட்டை வேடம் பூணமுடியாது.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னர் ஜெனிவாவில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஐ.நா.வில் நாம் வெற்றி பெற்றோம். ஆனால் அதன்பின்னர் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக எமக்கு ஏதிராகவே ஐ.நா.வில் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன.
ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆட்சிக்கு பின்னர்தான் ஐ.நா.வில் இலங்கைக்கு ஆதரவாக அனைத்து நாடுகளும் இணைந்து பிரேரணை நிறைவேற்றின. இன்று ஐ.நா. உட்பட சர்வதேசத்தின் ஆதரவு இலங்கைக்கு கிடைத்திருப்பது வெற்றியாகும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தோல்வியடையச் செய்ய முடியாது என்ற தோற்றப்பாடு காணப்பட்டது. ஆனால் அது முறியடிக்கப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமோகமாக வெற்றி பெற்றார்.
எந்தவொரு கட்சிக்கும் தனியொரு கட்சிக்குள்ள வாக்குகளினால் மட்டும் தேர்தலில் வெற்றி பெற முடியாது.
சிறுபான்மை இன மக்களினதும், மத்தியதர கொள்கையுடையவர்களினதும் ஆதரவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.