ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அரசாங்கம் இன்னும் அமுல்படுத்தவில்லை என கொழும்பு சட்டக் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளரும், மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான பிரதீபா மஹானமாஹேவா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஓர் கூட்டுத் தீர்மானம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அழுத்தங்கள் காரணமாக கலப்பு நீதிமன்றத்திற்கு அரசாங்கம் ஒப்புக்கொண்டது எனவும், காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் அமைத்தல் உள்ளிட்டன குறித்து சரியான முறையில் இலங்கை அசராங்கம் பேரம் பேசிக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானங்களை அரசாங்கம் இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அரசாங்கம் சர்வதேசத்தினையும் உள்நாட்டு சக்திகளையும் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் சர்வதேசத்திற்கு ஒன்றையும் உள்நாட்டுக்கு வேறு ஒன்றையும் தெரிவித்து வருகின்றார் இது நெருக்கடிக்குள் சிக்க வைக்கக்கூடிய விடயமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டிருந்தால் அந்த அறிக்கை பாதுகாப்புப் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டுமே தவிர மூடி மறைத்து வைத்துக் கொள்ளக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் தவறிழைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் இணைந்து கொள்ளாது சீனாவுடன் தொடர்ந்தும் நெருக்கமான உறவுகளை பேணியிருந்தால் நாடு இன்னமும் அபிவிருத்தி அடைந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் நோக்கங்களைக் கொண்டு மட்டும் செயற்படும் எதிர்க்கட்சிகளினால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடையாது எனவும், மஹிந்த தரப்பு அரசியல் நோக்கங்களிலேயே போராட்டங்ளை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களைப் போன்று அல்லது வெற் வரி விதிப்பு எட்கா உடன்படிக்கை போன்றவற்றுக்கு எதிராக மக்களும் வர்த்தகர்களும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.