துருக்கியில் நேற்று நடந்த ராணுவ புரட்சிக்கு மத தலைவர் காரணம் என அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்-. அவரது பெயர் பெதுல்லா குலன். தற்போது அவர் அமெரிக்காவின் பென்சில் வேனியா மாகாணம் போகோனோ நகரில் வசிக்கிறார். ஒரு காலத்தில் பெதுல்லா அதிபர் எர்டோகனின் நண்பராக இருந்தார். எர்டோகனின் சர்வாதிகார போக்கு பிடிக்காததால் அவரை பெதுல்லாகுலன் எதிர்த்தார். எனவே 1999-ம் ஆண்டு துருக்கியில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தங்கினார். துருக்கி மட்டுமின்றி உலகம் முழுவதும் இவருக்கு ஆதரவாளர்கள் உள்ளனர்.
கடந்த 2005-ம் ஆண்டில் பெதுல்லாவுக்கு ஆதரவாக 2 டெலிவிஷன் நிறுவனங்கள், 22 தொழில் நிறுவனங்களை துருக்கி அரசு கையகப்படுத்தியது. மேலும் ராணுவத்தில் உள்ள அவரது ஆதரவு வீரர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ராணுவ கர்னல் முகரம்கோஸ் என்பவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இவரது தலைமையில்தான் ராணுவ புரட்சி நடைபெற்றது. தற்போது நடந்த மோதலில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகன் இஸ்தான்புல் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது “ராணுவ புரட்சிக்கு மத தலைவர் பெதுல்லா குலனே காரணம். அவர் அமெரிக்காவில் இருந்து துருக்கியை ஆட்டிப்படைக்க நினைக்கிறார். அது நடக்காது. மேலும் ராணுவ புரட்சிக்கு காரணமான பெதுல்லாவை பென்சில்வேனியாவில் இருந்து வெளியேற்றி அமெரிக்கா அவரை துருக்கிக்கு திருப்பி அனுப்ப வேண்டும். உண்மையான நட்பு நாடு என்றால் அதை உடனடியாக செய்ய வேண்டும் என அதிபர் ஒபாமாவை கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா “துருக்கியிடம் இருந்து அதற்கான அதிகாரப் பூர்வமான எந்தவித தகவல் பரிமாற்றமும் இல்லை” என தெரிவித்துள்ளது.