தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவை சம்பள உயர்வாக பெற்று தருவதாக கூறி ஏமாற்றி வரும் அரசியல்வாதிகள் சிலர் அரசாங்கத்திடம் வழியுறுத்தப்பட்டு பெறப்பட்டுள்ள இடைக்கால கொடுப்பனவான 2500 ரூபாவையும் பெற்றுக்கொள்ள வேண்டாம் என வீடு வீடாக சென்று தொழிலாளர்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகின்றார்கள்.
இருந்தும் இன்னும் இரண்டு வாரங்களில் இடைக்கால கொடுப்பனவாக 2500 ரூபாய் தொழிலாளர்களின் கையில் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
அம்பகமுவ பிரதேச தோட்டப்பகுதிகள் சிலவற்றிற்கு 16.07.2016 அன்று உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தின் 3 பிரிவுகளில் இடம்பெற்ற பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
தேயிலை விலைக்கு ஏற்ப சம்பள உயர்வு கிடைக்கும் என சிலர் தொடர்ந்தும் பூச்சாண்டி காட்டுகின்றார்கள். அதேவேளை எதிர்காலத்தில் மலையகமெங்கும் தேயிலை இல்லாமல் போய்விடும், தேயிலை தொழிலை இழந்து விடுவோம் என கூறி வருகின்றார்கள்.
இவ்வாறு கூறப்படுவதால் தொடர்ந்தும் தொழிலாளர் ஜனங்களை அதே தோட்டப்பகுதியில் முடக்கி விட எத்தனிக்கும் ஒரு செயலாகும்.
ஆனால் எதிர்காலத்தில் தேயிலை இல்லாவிட்டால் என்ன? மாற்று தொழிலை மேற்கொண்டு தோட்டத்தை விட்டு வெளியேறி சிறப்பான வாழ்க்கை ஒன்றை அமைத்துக்கொள்வதற்கு தகுதியுள்ளவர்களாக தொழிலாளர்கள் இருக்கின்றார்கள் என்பதை உறுதியாக கூறுகின்றேன்.
நல்லாட்சி அரசாங்கம் தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பல்வேறு வசதிகளை எமது அமைச்சின் ஊடாக வழங்கி வருகின்றது.
இவ் வசதிகளை தொழிலாளர்களுக்கு எமது அமைச்சின் ஊடாக கொண்டு வந்து சேர்ப்பதில் சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்படுத்துள்ளது. இவ்வாறு தொழிலாளர் உரிமைகளை அவர்கள் பாவிக்க முடியாமல் தொடர்ந்தும் இவர்களை ஓரங்கட்டுவதாக தெரிவிக்கின்றேன்.
ஆகவே தொழிலாளர்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் தொழிலாளர்களின் தேவைகளை யார் பூர்த்தி செய்கின்றார்கள். அவர்களுக்கு எவ்வாறு ஆதரவு வழங்க வேண்டும் என்பதை தெரிந்து ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட 61 வீதத்திற்கு மேல் அங்கத்துவ பலம் வேண்டும். ஆனால் தற்பொழுது உடன்படிக்கையில் கைச்சாதிடும் இரண்டு பிரதான கட்சிகளுக்கு 45 வீதம் தான் அங்கத்துவம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் 1000 ரூபாவை சம்பள உயர்வாக பெற்று தருவதாக பொய் கூறி கொண்டு தேயிலை விலை மீது பழியை போட்டுக்கொண்டு சிலர் தொழிலாளர்களை ஏமாற்றி வருகின்றனர்.
ஆனால் தொழிலாளர்களின் நிலை உணர்ந்து நாம் தொழில் அமைச்சுக்கும், அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுத்து 2500 ரூபாவை இடைக்கால கொடுப்பனவாக பெற்றுள்ளோம்.
இத் தொகையானது இரண்டு வாரத்தில் தொழிலாளர்களின் கரம் வந்து சேரும். இத்தொகையை அரசாங்கமே தருகின்றது. கம்பனி காரர்கள் அல்ல. தொழிலாளர்கள் திருப்பி செலுத்தும் பணமும் அல்ல. கடனாகவும் வழங்கவில்லை. ஆனால் இத்தொகையை நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதமே வழங்கப்படுகின்றது.
இச் சலுகையை கூட அனுபவிக்க விடாமல் சில தொழிற்சங்க அங்கத்தவர்கள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்கின்றார்கள். இத்தொகையை கட்சி பேதமின்றியும், அணைவருக்கும் கிடைக்கும் சலுகை என்பதை மறந்து விடக்கூடாது என்றார்.