சுலைமான் றாபி
அண்மையில் தரமுயர்த்தப்பட்ட நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு X-Ray இயந்திர தொழில்நுட்ப இயக்குனர் இல்லாமையால் இவ் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை சந்தித்து வருகின்றனர்.
மேலும் வாகன விபத்துக்களில் காயமுறுபவர்களும், வேறு விபத்துக்கள் மூலம் பாதிக்கப்படுபவர்களும் இவ் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகின்ற போது அவர்களுக்கு அவசரமாக X-Ray எடுப்பதற்கான வசதிகள் இருந்தும் அதற்கான ஆளனிப் பற்றாக்குறை நிலவுகின்றது. இதனால் விபத்துக்களில் பாதிக்கப்படுபவர்களை வேறு வைத்தியசாலைகளுக்கு X-Ray படப்பிடிப்பிற்காக அனுப்ப வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் இவ் வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் X-Ray தொழில்நுட்ப இயக்குனர் வாரத்தில் இரண்டு நாட்கள் செவ்வாய், வியாழன் ஆகிய தினங்களில் இவ் வைத்தியசாலைக்கு பதில் கடமைக்காக சமூகம் தருகின்றார். இதனால் இந்த இரண்டு நாட்களும் அதிக நோயாளிகள் X-Ray படப்பிடிப்பிற்காக வரிசைகளில் காத்திருப்பதோடு இதன் மூலம் மக்கள் பல்வேறு அவதிகளையும் சந்தித்து வருகின்றனர்.
மேற்குறிப்பிட்ட இரண்டு நாட்கள் தவிர்ந்த ஏனைய தினங்களில் மக்களுக்கு ஏற்படும் X-Ray தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு தனியார் வைத்தியசாலைகளுக்கோ அல்லது தனியார் சிகிச்சை நிலையங்களுக்கோ இம்மக்கள் செல்ல வேண்டியுள்ளது.
இது தவிர தற்போது தனியார் வைத்திய சிகிச்சை நிலையங்களில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ரூபா 850 முதல் ரூபா 1,700 வரைக்கும் ஒரு X-Ray க்கு கட்டணம் அறவிடப்படும் நிலையில் குறைந்த வருமானம் பெறுபவர்கள் தங்களது தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியாது குறிப்பிட்ட இரண்டு தினங்கள் வரை காத்திக்க வேண்டிய அவல நிலையும் இம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் தற்போது மிகப்பெரும் தேவையாகவுள்ள X-Ray தொழில்நுட்ப இயக்குனர் தேவையின் ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்திக்குகேக் விடயத்தில் சுகாதாரப் பிரதியமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்கள் இதுவரைக்கும் எவ்வித நடவடிக்கைகள் எடுக்காமல் காலம்தாழ்த்துவதாகவும், இதனை உடன் நிபர்த்தி செய்து பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைக்க அரசியல் வாதிகளும், வைத்தியசாலை நிர்வாகமும் முன் வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.