பிரிட்டனில் சமீபத்தில் நடந்த ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கேமரூன் கருத்துக்கு எதிராக விலக வேண்டும் என்ற கருத்து வெற்றிபெற்றது. இதனால் கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இங்கிலாந்தில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், தாமாகவே பிரதமராகவும் நியமிக்கப்படுவார். இந்த இரட்டை பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து எரிசக்தி மந்திரி ஆண்டிரியா லீட்சம், உள்துறை மந்திரி தெரசா மே ஆகிய 2 பேர் இருந்தனர். ஆனால், ஆண்டிரியா லீட்சம் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததால், தெரசா மே அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.
இந்நிலையில் பிரதமர் டேவிட் கேமரூன் இன்று பதவி விலக உள்ளார். அதற்கு முன்னதாக கடைசி நிகழ்ச்சியாக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கான கேள்விகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, அவர் பதவி விலகுவதையொட்டி அவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்தினர். ஆனால், ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் (எஸ்.என்.பி.) உறுப்பினர்கள் பாராட்டவில்லை. இதேபோல் தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரமி கார்பின் மற்றும் பல எம்.பி.க்கள் கேமரூனை விமர்சனம் செய்து பேசினர்.
ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் அவருக்கு நாடாளுமன்றக் குழு தலைவர் ராபர்ட்சன் பேசும்போது, பதவி விலக உள்ள கேமரூன் மற்றும் அவரது குடும்பத்தினர் நலமுடன் வாழ வாழ்த்தினார். தொடர்ந்து பேசிய அவர், “ஐரோப்பிய யூனியனில் இருந்து நம்மை வெளியேற்றுவதற்கு விளிம்பு வரை கொண்டு சென்றதுதான் கேமரூனின் மரபாக இருக்கும். ஆகவே, அவரை இந்த அவையில் நாங்கள் பாராட்ட மாட்டோம்” என்றார்.
டேவிட் கேமரூன் பேசி முடித்ததும், உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டினர். ஆனால், ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் உறுப்பினர்கள் கைத்தட்டாமல் இருக்கையிலேயே அமைதியாக இருந்தனர்.