எங்களை கைது செய்து சிறையில் அடைக்க அரசாங்கம் தயாராகி வருகின்றது – மஹிந்தானந்த

மக்கள் போராட்டம் (ஜன சட்டன) பாத யாத்திரைக்கு முன்னர் கூட்டு எதிர்க்கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த பாத யாத்திரை போராட்டத்திற்கு பயந்து அரசாங்கம் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்க தயாராகி வருகிறது.

மேலும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கவும் தயாராகி வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

கம்பஹா உடுகம்பளையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்கவின் இல்லத்தில் பாத யாத்திரை தொடர்பான ஆரம்ப பேச்சுவாரத்தையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகள், நாடாளுமன்ற மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

எங்களை கட்சியில் இருந்து நீக்கினாலும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை கைவிட மாட்டோம். பேய்க்கு பயந்தால், மயானத்தில் வீடு கட்ட முடியாது.

இலட்சக்கணக்கான மக்களை வீதியில் இறக்கி அவர்களை கொழும்பு அழைத்து வந்து இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பு மக்கள் போராட்டத்திற்கு நாங்கள் தலைமைத்துவத்தை வழங்குவோம் எனவும் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இந்தியாவின் தேவைகளை அரசாங்கம் செயற்படுத்தி வருகிறது.

இதற்கு எதிராக செயற்படும் அனைவரையும் அரசாங்கம் அடக்க தயாராகி வருகிறது.

ரணில் மற்றும் மைத்திரி அரசாங்கத்திற்காக இரண்டு பொலிஸ் துறைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றையது ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை ரணில் விக்ரமசிங்க நெறிப்படுத்துகிறார்.அடுத்ததை மைத்திரிபால நெறிப்படுத்துகிறார்.

நாங்களை அனைவரும் இந்த இரண்டு பொலிஸ் துறைகளும் சென்று வந்துள்ளோம். அரசாங்கத்துடன் இருந்தால் எந்த பிரச்சினையுமில்லை.

நாங்கள் மக்களுடன் இருப்பதன் காரணமாவே எங்களை இப்படி அடக்கி வருகின்றனர் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.