யார் தூற்றிய போதும் என் பணியை கைவிடப்போவதில்லை : அமைச்சர் றிசாத்

சுஐப் எம் காசிம்

 

 ”சதிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் அபாண்டமான பிரசாரங்களுக்கும் மத்தியில் நான்கு தேர்தல்களில் நான் தொடர்ச்சியாக வெற்றி பெற முடிந்தமைக்கு மக்கள் எனக்கு வழங்கிய ஆதரவே பிரதான காரணமாகும்” இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

புத்தளம் அல் காசிமி கிராமத்தில் இஸ்லாமிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் “ஓய்ந்தும் ஒளி துலங்கும் ஆசான்கள் கௌரவிப்பு விழாவும், மாணவர்களின் பரிசளிப்பு விழாவும்” இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பங்கேற்றார். இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நவவி, மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், கலாநிதி யூசுப் கே மரைக்கார், அமைப்பாளர் அலிசப்ரி, அதிபர் நஜ்மி ஆகியோர் பங்கேற்றனர்.

அமைச்சர் அங்கு உரையாற்றியதாவது,

பாராட்டு விழாக்களும் கௌரவிப்பு நிகழ்வுகளும் மக்கள் பணியில் ஈடுபடுவோருக்கு மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தருகின்றது. இவ்வாறான விழாக்கள் ஏனையோரையும் பணி புரியத்தூண்டுகின்றது. 

தாராபுரம் ஒரு சின்னஞ்சிறிய கிராமம். இந்தக்கிராமத்தின் பிறந்து வளர்ந்து மக்களுடன் அன்பாகவும் நேசமாகவும் நான் வாழ்ந்தவன். எனக்கு இந்தக்கிராமத்தில் தொப்புள் கொடி உறவு இருப்பதால் இந்த வைபவத்தில் பங்கேற்பது பேரானந்தத்தைத் தருகின்றது. பிரதேச சபை உறுப்பினர் ஒருவரைக்கூட பெற்றுக் கொள்ள முடியாது என்ற நிலையில் இருந்த இந்தக் கிராமத்தில் பிறந்த நான் இன்று பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக அரசியல் கட்சியொன்றின் தலைவராக பரிணமிக்கின்றேன்.

இறைவனின் நாட்டமும் மூவின மக்களின் ஆதரவுமே இதற்குக்காரணம். சூழ்ச்சிகளுக்கும் பல்வேறு சவால்களுக்கும் நான் தொடர்ச்சியாக முகம் கொடுத்து வருகின்றேன். எனினும் இவற்றை இறைவனின் உதவியால் முறியடித்து வருகின்றேன். 

நல்லாட்சி அரசாங்கத்தின் உருவாக்கத்தில் கையெழுத்திட்ட ஆறு கட்சிகளில் நான் தலைமைப் பொறுப்பை வகிக்கும் “அகில இலங்கை மக்கள் காங்கிரஸும்” அடங்குகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்த விரும்புகின்றேன். 

அரசியல் வாழ்வில் என்னை ஒழிப்பதன் மூலம் வடக்கு முஸ்லிம்களின் குரல்வளையை நசுக்கலாம் என்று தனியார் இலத்திரனியல் ஊடகங்கள் திட்டமிட்டு செயற்படுகின்றன. இந்த முயற்சிக்கு நமது சமூகத்தின் அரசியல் கூத்தாடிகளும் துனை போகின்றனர். 

யார் தூற்றிய போதும் என் பணியை கைவிடப்போவதில்லை. 

ஆசிரியர் பணி மிகவும் புனிதமானது. நல்ல ஆசிரியர் சமூகத்தில் உயர் அந்தஸ்து பெற்றவர். அவர்களை நாம் மதிக்கப் பழக வேண்டும். நமது வாழ்விலே பணிவும் அடக்கமும் முக்கிய அணிகலன்கள். தம்பட்டமும் பெருமையும் நம்மை அழிக்கும். பணம், பதவி, பட்டம் ஒரு போதும் நிலைக்காது. ஒழுக்கமே நமக்கு உயர்வைத்தரும். நமது மார்க்கமான புனித இஸ்லாமும் இதையே வலியுறுத்துகின்றது. 

இவாறான விழாக்களை ஏற்பாடு செய்து ஆசிரியர்களை கௌரவித்த இந்த இளைஞர் சமுதாயத்தின் எதிர்கால வெற்றிக்காக் நான் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.