ஆடுகளை மேய்ப்பவர் அந்த ஆடுகளை ஒழுங்காக மேய்த்துக் கொண்டிருக்கும் காலம் வரைக்கும் ஆடுகளுக்கு புல்லில் மேய்வது மட்டுமே வேலையாக இருக்கும். அதற்கப்பால் எதுபற்றியும் அப்பாவி ஆடுகள் சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால், சிலவேளை ஒரு மேய்ப்பாளன் – தனது ஆடுகளை முறையாக மேய்த்துச் செல்லாமல் புற்களற்ற தரிசு நிலங்களிலும், நீரற்ற சதுப்புநிலங்களிலும் வெறுமனே விட்டுவிட்டு, எங்கோ மேற்குப் புறமாக உள்ள மரநிழலில் அமர்ந்து கொண்டு அந்த மரத்தின் கனிகளை ஒவ்வொன்றாக தின்று கொண்டு, தனக்கு விருப்பமான ஆடுகளுக்கு மட்டும் தீனி போட்டுக் கொண்டிருப்பான் என்றால் ஆடுகள் ஒரு கட்டத்தில் சலித்துப் போகும்.
ஆடுகளுக்கு தேவையானதைக் கொடுக்காமல் தன்னுடைய வயிற்றை நிரப்பிக் கொண்டு, மீதி மாங்காய்களை தன்னுடைய பிள்ளை குட்டிகளுக்கு மேய்ப்பாளன் சேகரித்துச் செல்வானென்றால், அந்த ஆடுகள், தம்மை உண்மைக்குண்மையாக நேசிக்கின்ற, தமது மேய்ச்சலில் கரிசனை காட்டுகின்ற மேய்ப்பன் யாராவது கிடைக்கமாட்டானா? என்று தேட ஆரம்பிக்கும். அச்சமயங்களில் வழிதவறிய பல ஆடுகள் ஒரு பிரதான ஆட்டின் வழிநடத்தலின் கீழ் மேய்ப்பனை தேடி பயணிக்க ஆரம்பிக்கும். அதுபோன்றதொரு நிகழ்வுதான் இப்போது கிழக்கை அடிப்படையாகக் கொண்ட முஸ்லிம் சமூகத்திற்குள் ஏற்பட்டுக் கொண்டிருப்பதாக தோன்றுகின்றது.
வழிதவறிய கட்சி
கிழக்கில் பல முஸ்லிம் அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள். அமைச்சர்கள், அரை அமைச்சர்கள் இருக்கின்றார்கள். இருந்தாலும், கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஒரு முஸ்லிம் தலைவர் இல்லை என்ற குறை காணப்படுகின்றது. இது 1985 இற்கு முன்னர் காணப்பட்ட ஒரு வெற்றிடத்திற்கு சமமானதாக கொள்ளப்படுகின்றது. முஸ்லிம் காங்கிரஸை நிறுவியதன் மூலம் மர்ஹூம் அஷ்ரஃப் இந்த வெற்றிடத்தை முழுமையாக நிரப்பியிருந்தார். ஆயினும் அவருடைய மறைவுக்குப் பின்னர் தலைமைப் பதவியை கேட்டுப் பெற்றுக் கொண்ட தற்போதைய தலைவர் றவூப் ஹக்கீம், அந்த வெற்றிடத்தை வெறுமைகளால் மட்டுமே நிரப்பிக் கொண்டு காலத்தை இழுத்தடித்து வந்துள்ளார் என்பது இன்று பரவலாக முன்வைக்கப்படுகின்ற கருத்தாகும்.
சுருங்கக் கூறினால், கிழக்கில் அப்போது ஹக்கீமை விட கட்சியில் மூத்த, இப்பிரதேசத்தில் பிறந்த பலர் இருந்தார்கள். ஆனால் அதையும் மீறி பிரதேசவாதத்தை பார்க்காது மத்திய மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்தத் தலைமைப் பதவியை விட்டுக் கொடுத்தார்கள். இந்த தலைமைப் பதவி கிழக்கு மக்களால் சூட்டப்பட்ட கிரீடம் என்று மேடையில் பேசுகின்ற தலைவர் ஹக்கீம், அந்த கிரீடத்தை தமக்களித்த கிழக்கு மக்களின் அபிலாஷைகளை எதிர்பார்த்த அளவுக்கு நிவர்த்தி செய்யவில்லை என்ற கருத்துநிலை மேலோங்கி இருக்கின்றது. முன்னர், மற்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளே இது பற்றி பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று கட்சிக்குள் இருக்கின்ற தவிசாளர், செயலாளர் மட்டுமன்றி பல உயர்பீட உறுப்பினர்களும் கணிசமான போராளிகளும் இதை உணர்ந்து ரகசியமாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். சிலர் நேரடியாகவே தலைவரிடம் வாதம்புரிந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் முஸ்லிம்களின் தனித்துவ அடையாள அரசியலாகும். முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயர், அஷ்ரஃப் என்ற மனிதன், மரம் என்ற சின்னம் இந்த மூன்றின் காரணமாகவே அக்கட்சியை இன்னும் மக்கள் உயிரிலும் மேலாக நினைக்கின்றார்களே ஒழிய, இந்த பற்றுறுதி என்பது இன்றிருக்கும் தலைவராலும் கூட்டாளிகளாலும் உருவாக்கப்பட்டது என்று கூறுவது சிரமம். ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்துவந்தான் என்ற பாடலை விடவும் கட்சிக்கு மிகக் குறைந்த பங்களிப்பைச் செய்த எத்தனையோ பேர் இன்று கட்சியின் பேரில் சுகபோகம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒட்டுமொத்தமாக, ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் மு.கா. தலைவருக்கும் இடையில் மிகக் குறைந்த வேறுபாடுகளையே காண முடிவதாக மூத்த உறுப்பினர்கள் புலம்பித் திரிகின்றார்கள். எல்லாமுமாக, கண்டியில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக கிடைக்கப் பெறும் பிரதிநிதித்துவத்துக்கும் சிங்கள மக்களின் ஆதரவுக்கும் பங்கம் விளைவிக்காத விதத்திலான அரசியலுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்ற இரகசியம், இப்போது பரகசியமாகிவிட்டது.
ஆக, எதற்காக றவூப் ஹக்கீம் மு.கா.வின் தலைவராக நியமிக்கப்பட்டாரோ அப்பணியை கடந்த 16 வருடங்களாக இதைவிட சிறப்பாக செய்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இன்று வலுவடைந்து வருகின்றது. மிகவும் ஆளுமையும், திறமையும், சாணக்கியமும் உள்ள ஒரு தலைவராக அவர் இருக்கின்ற நிலையில் உண்மையான இதய சுத்தியுடன் செயற்பட்டிருந்தால் கிழக்கு முஸ்லிம்களின் கதை மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக அனைத்து முஸ்லிம்களினதும் தலைவிதி இதைவிட சிறப்பாக இருந்திருக்கும். நாம் முன்னமே இப்பகுதியில் எழுதப்பட்ட கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல, பல்வேறு சந்தர்ப்பங்களில் தொடராக சமூக விரோத முடிவுகளை எடுத்துக் கொண்டும், பிரச்சினைகளுக்கு நிரந்தரமாகத் தீர்வு எடுக்காமல் காலத்தை இழுத்தடித்துக் கொண்டும், விட்ட பிழைகளை திருத்திக் கொள்ளாமல் போக்குக் காட்டிக் கொண்டும் ஹக்கீம் இழுத்தடித்துக் கொண்டிருந்தமையால், நிலைமை மிக மோசமாகியுள்ளது. இதனால் கட்சிக்குள்ளும் வெளியிலும் தலைமைத்துவத்தை திருத்த வேண்டும் அல்லது மாற்ற வேண்டும் என்ற குரல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. அதில் மிக முக்கியமான வேலைத் திட்டம்தான் பிரதேசம் கடந்த கிழக்கின் எழுச்சி என்பதாகும்.
பிரசார பலவீனங்கள்
மேலோட்டமாகப் பார்க்கின்றபோது இந்த கிழக்கின் எழுச்சி ஒரு வெற்றுக் கோஷம் போலவே தெரிகின்றது, சில இளைஞர்கள் சேர்ந்து கொண்டு முகநூலில் எழுதுவதாலும், போஸ்டர் ஒட்டுவதாலும், கூட்டம் போடு
வதாலும் ஒரு பெரிய அரசியல் இயக்கத்தின் தலைமைத்துவத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியுமா? என்ற சந்தேகமும் இருக்கின்றது. ஆனால், இதன் பின்புலம் பற்றி அறிந்தால் அநேகமான சந்தேகங்கள் தெளிவுபெறக்கூடும். உண்மையாகவே, முன்னர் ஒருக்காலும் அரசியல் களரியில் பேசப்பட்டிராத நான்கைந்து இளைஞர்களே கிழக்கின் எழுச்சியின் சொந்தக் காரர்கள் போல தெரிகின்றனர். பதவியற்ற சிலர் இவர்களை வைத்து இயக்குவதாகவும், பதவியைப் பெற்றுக் கொள்வதற்காகவே இந்த எழுச்சி என்ற பூச்சாண்டி காட்டப்படுவதாகவும் பரவலாக பேச்சடிபடுகின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.
கிழக்கின் எழுச்சியின் எல்லா விடயங்களையும் நேரடியாக, எடுத்த எடுப்பில் தலையில் வைத்து கொண்டாட முடியாது. ஏனெனில், அதில் சில முன்னெடுப்புக்கள் இன்னும் முறைமையாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளன. குறிப்பாக, கிழக்கின் எழுச்சியின் இலக்குகள், கொள்கைகள், இதில் அங்கம் வகிப்பவர்கள் யாரென்பதை மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு பிரதேசத்திலும் அடிமட்ட மக்களையும் சாதாரண போராளிகளையும் சென்றடையக் கூடிய வழிமுறைகளின் ஊடாக இதைச் செய்ய வேண்டியுள்ளது, இன்று வரையும் மு.கா. தலைவரை கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்கின்ற போராளிகளும் மக்களுமே மிக அதிகமாக இருக்கின்றனர். யார் தலைவராக இருந்தாலும் இவ்வாறு அதீத நம்பிக்கையை தலைவர் மீது மக்கள் கொண்டிருப்பார்கள். எனவே, அவர்களுக்கு தெளிவுபடுத்துவது அவசியம்.
ஹக்கீம் வருகின்றார் கூட்டம் போடுகின்றார், சாப்பாடு போடுகின்றார். கட்சி நல்ல நிலையில்தானே இருக்கின்றது. எதற்காக கட்சித்தலைமையை கிழக்குக்கு கொண்டு வரவேண்டும். அப்படிக் கொண்டு வந்தால் இவனுகள் ஆளுக்காள் அடித்துக் கொண்டு கட்சியை அழித்து விடுவார்கள் என்று நினைக்கின்ற மு.கா. ஆதரவாளர்கள் நம்மோடு பெருமளவில் இருக்கின்றார்கள். இவர்களை தெளிவுபெறச் செய்வது இன்றியமையாதது. ஹக்கீமை ஏன் மாற்ற வேண்டும் என்பதை நேர்மையாக, சரியாக எடுத்துச் சொல்ல வேண்டும். அவர் எதைச் செய்துள்ளார், எதைச் செய்யாமல் விட்டுள்ளார் என்பதை பட்டியலிட்டுக் காட்ட வேண்டும். அதைவிடுத்து பொய்யான குற்றச்சாட்டுகளையும் பிரதேசவாதத்தையும் முன்வைத்து மு.கா. தலைவரை வசைபாடி அதைச் செய்ய முடியாது. மந்திரத்தால் மாங்காய் விழாது.
அதேபோன்று இந்த கிழக்கின் எழுச்சி என்ற தாரக மந்திரத்தை இன்னும் விரிவுபடுத்த வேண்டியிருக்கின்றது எனலாம். கிழக்கின் எழுச்சி எனும் போது கிழக்கு மக்கள் தனியாக அரசியல் தலைமைத்துவம் கேட்கின்றார்கள் என்ற எண்ணம், வெளியில் வாழும் முஸ்லிம்களுக்கு ஏற்படலாம். ஆதலால், பிராந்தியம் கடந்த அல்லது பிரதேசவாதம் கடந்த கிழக்கின் எழுச்சி என்று இதை மாற்றிக் கொள்ள வேண்டும். அதன்மூலம் கிழக்கில் தலைமைத்துவம் வேண்டும் என்றாலும் அது பிரதேசவாதத்திற்கு அப்பாற்பட்ட, எல்லா மக்களுக்கும் பொதுவான ஒரு தலைமையாகவே இருக்கும் என்ற செய்தியை சொல்ல முடியும்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்பவர் முஸ்லிம் அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவர். அவர் இந்த சமூகத்திற்கு பெரிதாக எதையும் செய்யவில்லை என்ற அபிப்பிராயம் இருந்தாலும், அவர் எதுவும் செய்யவில்லை என்று கூறுவதற்கு முற்படக் கூடாது. அவர் ஏதாவது நல்ல விடயங்களை செய்திருப்பாராயின் அதை பாராட்டவும் பழகிக் கொள்ள வேண்டும். அவரது தனிப்பட்ட பலவீனங்களை அரசியலோடு போட்டு குழப்பிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அத்தோடு, கிழக்கின் எழுச்சி பிரசார இயக்கமானது, மு.கா. தலைவர் ஹக்கீம் தன்னை திருத்தி கொள்வதற்கான காலஅவகாசம் ஒன்றை வழங்குதல் வேண்டும். மனிதன் தவறுகளுக்கு மத்தியில் படைக்கப்பட்டவன் என்ற அடிப்படைத் தத்துவத்தின் பிரகாரம், தன்னை மீள்வாசிப்பு செய்வதற்கான சந்தர்ப்பத்தை அளித்தல் நல்ல விடயமாகும்.
கிழக்கின் எழுச்சி பிரசாரத்தின் பின்னணியில் யார் யார் இருக்கின்றார்கள் என்பது மக்களுக்கு தெரியாது. ஆனால், மு.கா.வின் ஆரம்பகால பொருளாளர் வபா பாறுக் என்பவர் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஓய்வுநிலை அரசியல்வாதி ஒருவரது புதல்வரும் மு.கா.வின் முக்கிய பதவியில் உள்ள ஒருவரது புதல்வரும் இதன் அடுத்தகட்ட பதவியல்லா நிலைகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இவ்விடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். ஒரு போராட்டம் அல்லது எழுச்சிக்கு யாராவது ஒருவரை முதன்மைப்படுத்த வேண்டும் என்ற நியதி காணப்பட்டாலும், யாரையும் இப்போது தலைவராக அறிவித்திருக்கக் கூடாது என்ற கருத்து, சமூகம்சார் அவதானிகள் பலராலும் முன்வைக்கப்படுகின்றது. அதேபோன்று, அரசியல்வாதிகளின் புதல்வர்களும் இனிவரும் காலத்தில் தமக்கான பதவிகளை நிறுவிக் கொள்ளக் கூடாது.
வபா பாறுக் என்பவர் மு.கா.கட்சியை பதிவுசெய்வதற்கான நிபந்தனையாக காணப்பட்ட வங்கிக் கணக்கு கொடுக்கல்வாங்கல்களை நிரூபித்துக் காட்டுவதற்கு அவசியமான 10 இலட்சம் ரூபாவை அஷ்ரஃபுக்கு வழங்கியவராவார். அதன் காரணத்தினாலே மு.கா.வின் பொருளாளராக அவர் நியமிக்கப்பட்டார். எவ்வாறிருப்பினும், அவர் மீது முன்வைக்கப்பட்ட ஒரு குற்றச்சாட்டை தொடர்ந்து அஷ்ரஃப் அவரை கட்சியில் இருந்து நீக்கினார். அவர் ஏன் நீக்கப்பட்டார் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகும். அதுபற்றி இன்னுமொரு கட்டுரையில் குறிப்பிடலாம். எவ்வாறிருப்பினும் கடந்த 25 வருடங்களாக வபா பாறுக் செயற்பாட்டு அரசியலில் இல்லை. மு.கா.வின் உறுப்பினராக இல்லை என்பது ஒருபுறமிருக்க, முஸ்லிம்களின் அரசியல் நலன்விரும்பியாக கூட அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. இவ்வாறிருக்கையில், திடுதிடுப்பென எமது தலைவர் என்ற அந்தஸ்தில் வபா பாறுக்கை கொண்டு வந்து முன்னிறுத்துவதை ஏற்றுக் கொள்வதற்கு மக்கள் பின்னிற்பதை அவதானிக்க முடிகின்றது. எனவே, இதில் அவரை தலைவராக நியமிக்காமல் அவரை பிரதான செயற்பாட்டாளராகவும் ஏனையவர்களை துணை செயற்பாட்டாளர்களாகவும் அறிவிப்பது நல்லதென தோன்றுகின்றது.
இத்தனை நாளாக நாம் பார்த்தேயிராத ஒரு மனிதரை எங்கள் தலைவர் எனக் கூறும்போது அவர் இந்த எழுச்சியின் தலைவரா? அல்லது மு.கா.வின் எதிர்கால தலைவரா என்ற சந்தேகம் மக்கள் மனதில் ஏற்படுவதில் வியப்பேதும் இல்லை. எனவே பாறுக்கை தலைவராக பிரகடனம் செய்வதை தவிர்த்து அவர் பற்றிய நல்லெண்ணத்தை மறைமுகமாக ஏற்படுத்த வேண்டியிருக்கின்றது. இப் போராட்டம் கிழக்கிற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக ஒரு சிறந்த தலைமைத்துவத்தை பெற்றுக் கொள்வதற்கான ஒரு முன்னெடுப்பாகும். ஆனால் பதவிக்காகத்தான் இது நடைபெறுவதாக விளக்கமற்ற குழப்பங்கள் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் பதவிப் பெயர்கள் அறிவிக்கப்படுமாயின் அந்த சந்தேகங்கள் உண்மையாகிவிடும். அவ்வாறே, ஒரு சிறந்த மாற்றுத் தலைமைத்துவம் கிழக்கில் உருவாகுமாக இருந்தால், இப்பணியை அவரிடம் ஒப்படைத்துவிட்டு விலகுவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் என்ற நிலைப்பாட்டை கிழக்கின் எழுச்சி இயக்கம் அறிவிக்க வேண்டும். அப்படியானால், சுவரொட்டிகளில் எமது தலைவர் என்ற இடத்தில் கட்டமிடப்பட்டு அதற்கு கேள்வி அடையாளம் போடப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இவையெல்லாம் கிழக்கின் எழுச்சி பற்றிய நல்லெண்ணத்தை சாதாரண மக்களிடையே ஏற்படுத்தும். மேற்குறிப்பிட்டவை எல்லாம், கிழக்கின் எழுச்சி பிரசார வேலைத்திட்டத்தின் பலவீனங்களாகும். இந்தப் பலவீனங்களை திருத்திக் கொள்ள வேண்டும். அத்துடன், நேரடி அரசியலில் இருக்கின்ற, மக்களால் மதிக்கப்படுகின்ற ஆளுமைகள் உள்வாங்கிக் கொள்ளப்பட வேண்டும். புதிதாக ஒரு பிஸ்கட்டை அறிமுகம் செய்வது போல, விளம்பரம் செய்து மு.கா.வை கைப்பற்றுவது சாத்தியமில்லை.
கிழக்கிற்கு தலைவரை கொண்டுவருதல் என்ற கோஷம், மு.கா. என்ற கட்சியை அழிப்பதற்கான மறைமுக நிகழ்ச்சி நிரலாக இருக்கக் கூடாது. அவ்வாறிருப்பினும் அதற்கெதிராக ஊடகங்கள் எழுதும். அதேபோன்று, ஏற்கனவே பல கட்சிகள் உருவாகி வாக்குகள் சிதறுண்டு போயுள்ள நிலையில், ஏதாவது ஒரு பெயரில், கோஷத்தில் இன்னுமொரு கட்சியை உருவாக்கும் முயற்சியாக இது இருக்கவே கூடாது.
ஏ.எல்.நிப்ராஸ்
நன்றி – வீரகேசரி