கௌஷாலின் தூஸ்ராவைப் பரிசோதித்து அனுமதி பெற இலங்கை கிரிக்கெட் சபை முடிவு

இலங்கை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் தரிந்து கௌஷாலின் தூஸ்ரா பந்துகளை சோதனைக்குட்படுத்தி, அதன்மூலம் அவற்றுக்கு அனுமதி பெறப்படுவதற்கு, இலங்கை கிரிக்கெட் சபை முடிவுசெய்துள்ளது. கடந்தாண்டு ஓகஸ்டில் இடம்பெற்ற இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து, கௌஷாலின் பந்துவீச்சுத் தொடர்பாகச் சந்தேகம் எழுப்பப்பட்டிருந்தது.

 

எனினும், அவரது வழக்கமான பந்துவீச்சில் தவறுகள் இருக்கவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது தூஸ்ரா பந்துகளில், அவர் வீசிய 18 பந்துகளில் 9 பந்துகள், விதிகளை மீறியமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, சர்வதேசப் போட்டிகளிலிருந்து விலகிய கௌஷால், தனது பந்துவீச்சுப் பாணியில், இலங்கை கிரிக்கெட் சபையின் பயிற்றுநர்களின் உதவியோடு, மாற்றங்களை ஏற்படுத்திவந்தார்.

 

இந்தக் காலத்தில், டொப்-ஸ்பின்னர் எனப்படும் நேராகச் செல்லும் பந்துவீச்சையும் அவர் மேம்படுத்தினார். இலங்கையில் உயர் திறமை வெளிப்பாட்டு முகாமையாளராகப் பதவியேற்ற சைமன் வில்லிஸின் கீழ், கடந்த 4 வாரங்களாகக் கடுமையான பயிற்சியில் கௌஷால் ஈடுபட்டதோடு, தற்போது அதில் முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

 

இதனையடுத்தே, மிக விரைவில் அவரது தூஸ்ரா பந்துவீச்சைச் சோதனைக்குட்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போதைய முன்னணிச் சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத், தனது ஓய்வுக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில், இளைய வீரர்களில் முக்கியமானவராக, தரிந்து கௌஷால் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.