டாக்கா தாக்குதலில் எங்களுக்கு தொடர்பு இல்லை : பாக். உளவுத்துறை

வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள உணவகம் மீது நேற்று இரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் பணயக் கைதிகளாக பிடிபட்டிருந்த 20 வெளிநாட்டினர் கழுத்தை அறுத்தும், துப்பாக்கிகளால் சுட்டும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். மீட்பு நடவடிக்கையின்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். ஆறு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவன் உயிருடன் பிடிக்கப்பட்டான்.

கடந்த பல ஆண்டுகளாகவே வங்காளதேசத்தில் இயங்கிவரும் ஜமாயத்துல் முஜாஹிதீன் என்ற உள்நாட்டு தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாகவும், இவர்களுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என வங்காளதேச அரசு தெரிவித்துள்ளது.

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசியல் ஆலோசகராக இருக்கும் ஹொசைன் தவூபிக் இமாம், ஜமாயத்துல் முஜாஹிதீன் அமைப்புக்கும், ஐ.எஸ்.ஐ.-க்கும் உள்ள தொடர்பு அனைவரும் அறிந்த ஒன்று. உணவகம் மீதான தாக்குதலில் பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு தொடர்பு உள்ளது என்று தெரிவித்தார்.

ஆனால் வங்காளதேசத்தின் குற்றசாட்டை ஐ.எஸ்.ஐ. அமைப்பு மறுத்துள்ளது. இது மிகவும் வருந்ததக்க, பொறுப்பற்ற மற்றும் ஆத்திரமூட்டும் செயல் என்று பாகிஸ்தானின் உளவு அமைப்பு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.