டெல்லி சென்றுள்ள தமிழக மீனவப் பிரதிநிதிகள், தமிழக, இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை நாளை வியாழக்கிழமை சந்தித்துப் பேசவுள்ளனர்.
தமிழகத்தில் மீன்பிடி தடைக் காலம் முடிவடைந்து கடந்த ஒரு மாத காலத்தில் ஆறு வெவ்வேறு சிறைபிடிப்பு சம்பவங்கள் மூலம் இராமேசுவரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 29 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறைபிடிக்கப்பட்ட 94 தமிழக மீனவர்களின் படகுகள் மன்னார், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை கடற்படை முகாம்களில் உள்ளன. இந்தப் படகுகள் சேதமடைந்து வருவதால், 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றன.
இந்தநிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில், இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தமிழக மீனவப் பிரதிநிதிகள் நேற்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர். இவர்கள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை, நாளை நேரில் சந்தித்துப் பேச உள்ளனர்.
அப்போது, இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யவும், இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்கவும், இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்த வலியுறுத்தியும், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் கோரிக்கை விடுக்க உள்ளனர்.