வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது. இன்னொரு அணி யார் என்பதை தீர்மானிக்கும் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 285 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 185 ரன்களில் சுருண்டது. இந்த தோல்வி தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தை உலுக்கிவிட்டது. இதற்கிடையில் பயிற்சியாளர் மீது கடும் விமர்சனம் எழுந்து வருகிறது.
ஆனால், தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ், தோல்விக்கு பயிற்சியாளரை குறை சொல்லக்கூடாது, இந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து டி வில்லியர்ஸ் மேலும் கூறுகையில் ‘‘கடைசி போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியது மிகவும் மோசமானது. பயிற்சியாளர் ரஸல் டொமிங்கோ கடந்த நான்கு வருடங்களாக தென்ஆப்பிரிக்கா அணிக்காக சிறப்பான வகையில் உழைத்திருக்கிறார். அவர் சிறப்பான பணியை செய்து முடித்தார். அவருக்கு இப்படி ஒரு நெருக்கடி வந்துள்ளதை பார்க்க கவலையாக உள்ளது.
பயிற்சியாளர் மீது விமர்சனம் வைப்பது சரியல்ல. வீரர்கள் மீதுதான் விமர்சனம் வைக்க வேண்டும். தோல்வியடைந்தது அவரது பணியல்ல. நம் அணிக்காக என்ன செய்கிறார்கள், அதை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதில் அவர்கள்தான் உலகத்தி்ல் சிறந்தவர்கள் என்று நினைக்கிறேன்.
துரதிர்ஷ்டவசமாக வீரர்கள் இந்த தொடரில் சரியாக விளையாடவில்லை. சில போட்டிகளில் நாங்கள் வெற்றிபெறும் நிலையில் இருந்தோம். ஆனால் முடியாமல் போய்விட்டது. இது வீரர்களால் வந்ததுதான். எங்களுடையை தயார் நிலை சரியாகத்தான் இருந்தது. அனைத்து பயி்ற்சியாளர்களும் அவர்களது வேலைகளை சரியாக செய்தார்கள்” என்றார்.