இ.தொ.காவுக்கு அமைச்சு பதவிகளை வழங்காது, ஆதரவை மாத்திரம் பெற்றுக்கொள்ளல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அவரது கட்சிக்கும் அமைச்சர் பதவியை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தொண்டமானுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியையும் பிரதியமைச்சர் பதவியை ஒன்றை வழங்க அரசாங்கம் முன்னர் தீர்மானித்திருந்தது.

இதற்கு அமைச்சர் திகாம்பரம் உட்பட மலையகத்தை பிரதிநிதித்துப்படுத்தும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். இதன் காரணமாகவே அரசாங்கம் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் தொண்டமான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் எதிராக மலையகத்தில் பிரசாரத்தை மேற்கொண்டிருந்தார். இப்படியான ஒருவருடன் தம்மால் அரசாங்கத்தில் இருக்க முடியாது எனவும் திகாம்பரம் உட்பட மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடமும். பிரதமரிடமும் கூறியுள்ளனர்.

இவர்கள் முன்வைத்த விடயங்களை கவனத்தில் கொண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கு அமைச்சு பதவிகளை வழங்காது, கட்சியின் ஆதரவை மாத்திரம் பெற்றுக்கொள்வது என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.