வடக்கு- கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு தேவைகளுக்காக படையினர் தங்கியிருப்பதற்கான நிலங்கள் தவிர்ந்து ஏனையவற்றை மக்களிடம் வழங்குவோம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
படையினருக்கு தேவையான நிலங்களுக்கு பதிலாக அதன் உரிமையாளர்களுக்கு தேவையான நஷ்டஈட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 201.3 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக இன்று அனுமதிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நலன்புரி நிலையங்களிலும், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை, அவர்களுடைய சொந்த நிலங்களில் மீள்குடியேற்ற முயற்சித்து வருகின்றனர். அவர்களுடைய பணிப்பின் பெயரிலேயே நான் இங்கு வந்திருக்கின்றேன். அந்தவகையில் வட, கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த படையினர் தங்கியிருப்பதற்கு தேவையான நிலங்கள் தவிர மக்களுடைய மற்றைய நிலங்களை அவர்களிடமே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதற்காக முப்படையினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது படையினருக்கு தேவையான நிலங்கள் எவ்வளவு என்பதை நாம் அடையாளப்படுத்தவில்லை. அதற்காக விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் நடக்கின்றன. எனினும் படையினருக்கு தேவையான காணிகளுக்காக அந்த காணிகளுக்கு சொந்தமான மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் மீதமான நிலங்களை மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கும் நடவடிக்கை உடனடியாக செய்ய கூடிய ஒன்றல்ல. எனவே அது படிப்படியாக மேற்கொள்ளப்படும்.
இதேபோல் முகாம்களில் உள்ள காணி இல்லாத மக்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை யாழ்.மாவட்டச் செயலகம் மேற்கொள்ளும் என தெரிவித்தார்.
நிகழ்வின் முடிவில் வலி, வடக்கு மீள்குடியேற்ற விடயம் 2018ம் ஆண்டு வரையில் நீடிக்கும் என ஒஸ்லோவில் அரசாங்கத்தின் சார்பில் கூறப்பட்டிருக்கும் கருத்து தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அவ்வாறில்லை. 2018ம் ஆண்டில் அது நிறைவு செய்யப்படும் என்ற வகையில் அவ்வாறு கூறப்பட்டதாக அவர் பதிலளித்துள்ளார்.