சாணக்கியத்திற்கு புதுப்புது தலையிடிகள் – ஏ.எல்.நிப்ராஸ்

rauff harees nizaam
 காலில் ஏற்பட்ட ஒரு சிறிய காயத்திற்கு முறையாக மருந்து கட்டாமல், வெறும் வெள்ளைச் சீலையை மட்டும் சுற்றிக் கட்டிவிட்டு காலத்தை இழுத்தடித்து ஆறப்போட்டு ஆற்ற நினைத்த காயங்கள் சீழ்பிடித்து நாற்றமெடுக்கத் தொடங்கும் என்பது நமக்குத் தெரியும். சின்னஞ்சிறு காயத்திற்கு உரிய காலத்தில் சிகிச்சை அளிக்காததால் நீண்ட காலத்தின் பின்னர் முழுமையாக ஒரு காலினை அகற்றும் நிலைமைக்கு ஆட்பட்டவர்களையும் நாமறிவோம். முஸ்லிம் காங்கிரஸிற்குள் தீர்க்கப்படாதிருக்கின்ற ஏகப்பட்ட முரண்கள் இப்படியான ஒரு இக்கட்டான கட்டத்திற்குள் கட்சியை இன்று கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றது எனலாம்.

 
சாணக்கியம் என்பது எப்போதும் வேலை செய்து கொண்டிருப்பதில்லை. உண்மையான சாணக்கியம் என்னவென்று சரியாக புரிந்து கொள்ளாமல் எல்லாவற்றையும் கண்ணைமூடிக் கொண்டு சாணக்கியம் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களால், அது வேலை செய்யவில்லை என்பதை புரிந்து கொள்ளவும் முடிவதில்லை. அண்மைய நாட்களில் முஸ்லிம்களின் பிரதான அரசியல் கட்சிக்குள் இவ்வாறான நிலைமைகளே அவதானிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

 
உள்ளக முரண்பாடுகள், பனிப்போர்கள், குழிபறிப்புகள், பதவிப் போட்டிகள் போன்றவை எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவானவையே. பெருந்தேசியக் கட்சிகளிலும் இவ்வாறான பாரதூரமான முரண்பாடுகள் காணப்படுகின்றன. முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமன்றி ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கு மத்தியிலும் ஏகப்பட்ட சிக்கல்களும் பதவிப் போட்டிகளும் இருக்கவே செய்கின்றன. மு.கா.வுக்குள் தலைவருக்கும் செயலாளர் மற்றும் தவிசாளருக்கும் இடையிலான முரண்கள் வலுவடைந்து கொண்டிருப்பது போல மக்கள் காங்கிரஸிற்குள்ளேயும் தலைவர், செயலாளர் ஆகியோரும் சட்டத்தின் துணைகொண்டு மல்லுக்கு நிற்கின்றனர். தேசிய காங்கிரஸைப் பொறுத்தமட்டில் அதனது பரம்பல் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதாலும், தலைவரும் செயலாளரும் ஒருவரே என்பதாலும் பதவிச் சண்டைகள் பெரிதாக இல்லை என்றே கூறவேண்டும்.

 
தவறுகளின் வலிமை

 

 ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஏற்பட்டிருக்கின்ற முரண்பாடுகள் மிகவும் பாரதூரமானவையாகும். இலங்கை வாழ் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களால் ஆதரிக்கப்படும் முஸ்லிம் கட்சியாக மு.கா. திகழ்கின்றமையால், அக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற சிக்கல்கள் ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியலிலும் ஒருவித தேக்க நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழர் அரசியலில் தமிழரசுக் கட்சியைப் போல முஸ்லிம் அரசியலில் முஸ்லிம் காங்கிரஸின் வகிபாகம் முக்கியமானது. இரா.சம்பந்தனைப் போன்ற கொள்கைப் பிடிப்புள்ள ஒரு ஆளுமையாக மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் இருக்கின்றாரா என்பது ஒருபுறமிருக்க, முஸ்லிம் அரசியலில் ஒரளவுக்கு அந்த இடத்தில் வைத்தே ஹக்கீம் நோக்கப்படுகின்றார் என்று சொல்லலாம். டக்ளஸ் தேவானந்தா செய்கின்ற தவறுகளைப் போல சம்பந்தன் பிழைகளை செய்து கொண்டிருக்க முடியாது என்பது போலவே, சிறு முஸ்லிம் கட்சிகளின் அரசியல்வாதிகள் செய்கின்ற தவறுகளைப் போன்று ஹக்கீமும் தவறுகளை இழைத்துக் கொண்டிருக்க முடியாது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் சம்பந்தன் எவ்வாறு சந்தியில் நிறுத்தப்பட்டு தமிழ் மக்களால் கேள்வி எழுப்பப்படுவாரோ, அவ்வாறே முஸ்லிம்கள் ஹக்கீமிடமும் கேள்வி கேட்டு விமர்சிப்பதை தவிர்க்க முடியாது என்ற யதார்த்தத்தை கோபப்படாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 

 

அண்மைக்காலமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எடுக்கின்ற எல்லா நகர்வுகளும் பாரிய சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அவருடைய பல சாணக்கிய காய்நகர்த்தல்கள் சாண் ஏற முழம்சறுக்குவதை பார்க்கும் சிலர் ‘அவருக்கு இப்போது கெட்டகாலம் என்றும், ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பதே நல்லது போல் தெரிகின்றது’ என்று பேசிக் கொள்கின்றனர். மேலோட்டமாக பார்க்கின்றபோது இந்த நிலைப்பாடு சரியாக தோன்றலாம். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை நோக்கத்திற்கு மாறாக கட்சியை வழிநடாத்திச் சென்றமையும், கூட்டுத் தீர்மானம் இல்லாமல் தற்றுணிபாக செயற்பட்டமையும், ஒரு கட்சி என்ற வகையில் மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டதுமே இவ்வாறான பல சிக்கல்களை தோற்றுவித்துள்ளது என்பதே தர்க்கவியல் நீதியாகும்.

 
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தவறாக செயற்பட்டுள்ளது என்று கூறுவதைக் காட்டிலும் மு.கா. தலைவர் தவறிழைத்திருக்கின்றார் என்று கூறுவோரே அதிகமாக உள்ளனர். எல்லா அதிகாரங்களையும் ஒருமுகப்படுத்தி வைத்துக் கொண்டு கடந்த காலத்தில் அவர் செய்யத் தவறிய காரியங்கள், சமூக நலனை கருத்திற்கொள்ளாது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் போன்றவையே அவர்; மீதான இவ்விமர்சனங்களுக்கு அடித்தளமிட்டுள்ளது. இவ்வாறு இன்று மு.கா. தலைவர் மீது வைக்கப்படுகின்ற எல்லா வகையான குற்றச்சாட்டுக்களுக்கும் அவர் மட்டுமே பொறுப்பல்ல என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அஷ்ரஃபின் மரணத்திற்கு பிறகு றவூப் ஹக்கீமை இணைத்தலைவராகவும் தனித் தலைமையாகவும் பிரகடனம் செய்தவர்கள், கட்சிக்குள் ஜனநாயகம் மீறப்படுகின்ற போது தமது சட்டைப் பைகளை நிரப்பிக் கொண்டு அதற்கு ஆதரவளித்த தளபதிகள், மௌனமாக இருந்து சம்மதம் தெரிவித்த உயர்பீட உறுப்பினர்கள், எல்லா சந்தர்ப்பங்களிலும் ஹக்கீமில் சரி கண்ட குருட்டு அரசியல்வாதிகள் எல்லோருக்கும் இதில் பங்கிருக்கின்றது.

 
அதுமட்டுமன்றி, மு.கா. தலைவர் தவறு செய்திருப்பதாக சொல்லப்படுமாக இருந்தால், இன்று தலைவரது போக்கை விமர்சித்துக் கொண்டு ஒரு சாத்வீக போராட்டத்தில் குதித்திருக்கின்ற தவிசாளருக்கும் செயலாளருக்கும் கூட இதில் ஒரு சிறு பங்கிருக்கின்றது. பசீர் சேகுதாவூத், ஹசன்அலி போன்றோர் தலைவர் வழிதவறுகின்ற வேளையில் கட்சிக்குள் அவருடைய மூக்கணாங்கயிற்றை இழுத்துப் பிடித்தார்கள் என்பது உண்மையே. ஆயினும், இந்த விவகாரங்களை எல்லாம் மக்கள்மயப்படுத்தி அதற்கான தீர்வை காண்பதற்கு செயலாளர், தவிசாளர் உள்ளடங்கலாக மேற்சொன்ன எந்த தரப்பினரும் அப்போது முன்னிற்கவில்லை என்ற காரணத்தினாலேயே மு.கா. தலைவர் தான்தோன்றித்தனமாக செயற்படுவதற்கான தைரியத்தை பெற்றிருக்கின்றார். ஆகவே, அதிகாரங்களை தலைவர் தவணை முறையில் எடுத்துக் கொண்டார் என்றால், கட்சியில் உள்ள மற்றவர்கள் அதை களவு கொடுத்திருக்கின்றனர் என்பதே அதன் அர்த்தமாகும்.
எனவே இன்று றவூப் ஹக்கீமை மட்டும் குற்றம் சாட்டி விட்டு யாரும் விலகிச் செல்ல முடியாது.

 

 

சமூகத்தின் முன்னால் அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டாலும் கூட்டுப்; பங்காளிகளுக்கும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தோருக்கும் மக்களுக்கு பொறுப்புச் சொல்ல வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. அதேபோல், சூடுசுரணையற்ற முஸ்லிம் சமூகமும் இதில் மிகப் பெரும் வரலாற்றுத் தவறை விட்டுக் கொண்டிருக்கின்றது. ஏனைய முஸ்லிம் கட்சிகளைப் போலவே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அமைச்சுப் பதவிகளுக்காகவும், பணம் மற்றும் வரப்பிரசாதங்களுக்குமே முன்னுரிமை அளித்து செயற்படுகின்றது என்பது போராளிகளும் மக்களும் அறியாத விடயமல்ல. இவ்வாறு முஸ்லிம்களின் அடையாள அரசியல் முற்றுமுழுதாக வர்த்தகமயமாகிக் கொண்டிருக்கின்ற ஒரு காலப்பகுதியில், இந்தியாவில் நடிகைகளின் சிலைகளுக்கு பால் ஊற்றுவதுபோல, தம்முடைய அரசியல்வாதிகளை திரைப்பட ஹீரோக்களை கண்மூடித்தனமாக கொண்டாடுகின்ற மக்களும், இந்த அரசியல் பின்னடைவுக்கு காரணமாகியிருக்கின்றார்கள்.
வரலாற்று சந்தர்ப்பம்

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உண்மையாகவே அதன் ஸ்தாபக தலைவரின் வழியில்தான் செல்கின்றதா என்ற சந்தேகம், பல வருடங்கள் பழமையானதாகும். ஏனென்றால், அஷ்ரஃபின் கொள்கையை பின்பற்றுவோர் எதையெல்லாம் செய்திருக்க கூடாதோ அவற்றையெல்லாம் ஹக்கீம் தலைமையிலான மு.கா. கடந்த காலங்களில் செய்திருக்கின்றது. குறிப்பாக, திவிநெகும சட்டமூலத்தை கண்ணைமூடிக் கொண்டு ஆதரிக்கும் களநிலையை ஏற்படுத்தியமை, படுபாதகமான 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கண்ணை திறந்து கொண்டே ஆதரவளித்து பின்னர் மனம் வருந்தியமை ஆகியவை மிகவும் வெளிப்படையான முன்னைய தவறுகளாகும். இவற்றையெல்லாம் செய்தாலும், மக்களுக்கு இதற்கு சமமான ஏதாவது நன்மைகளை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 16 வருடங்காளாக கட்சியின் தலைவராக முழு அமைச்சராகவும் இருக்கின்ற ஹக்கீம், முஸ்லிம் மக்களுக்கு எதைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார் என்ற கேள்விக்கு அவரிடமே தெளிவான பதிலிருக்குமா என்பது சந்தேகமே.

 
பழைய கதையை விட்டுவிடுவோம் என்று வைத்துக் கொள்வோம். நடப்பு விவகாரத்திற்கு வருவோம். அதன்படி இப்போது நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டு இருக்கின்றது. தம்முடைய நீண்டகால கோரிக்கைக்கு, போராட்டத்திற்கு பலன் கிடைக்கும் காலமாக இதை தமிழ் மக்கள் கருதுகின்றனர். அந்த வகையில் 1978 இற்குப் பிறகு மிகப் பிரமாண்டமானதொரு கட்டமைப்பு மாற்றம் இலங்கை அரசியலில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. பாராளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாறியிருக்கின்ற அதேநேரத்தில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது எவ்வளவு முக்கியமான காலம் என்பதை சிறுபிள்ளைகூட அறியும். அப்படியிருந்தும் மு.கா. எந்தவிதமான காத்திரமான நகர்வையும் மேற்கொள்ளவில்லை. தேசியப்பட்டியல், செயலாளர் விவகாரம் போன்ற சின்னச் சின்ன சிக்கல்களையே தீர்த்து வைக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் அக்கட்சி, அரசியல் தீர்வுப் பொதியில் முஸ்லிம்களின் உரிமைகளை உறுதி செய்தல் என்ற பெரிய பாரத்தை பற்றி சிந்திக்காமல் இருக்கின்றமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

 
முஸ்லிம் காங்கிரஸ் அடிப்படையில் கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கட்;சி என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று வரும்போது இணைந்த வடகிழக்கிலான ஒரு தீர்வுப் பொதியை பெறுவதற்கே தமிழர் தரப்பு எல்லா இராஜதந்திர நகர்வுகளையும் மேற்கொண்டிருக்கின்றது. அப்படியாயின், இந்த தீர்வுத் திட்ட வரைபில் முஸ்லிம்களுக்கு என்ன கிடைக்க வேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்த வேண்டிய பொறுப்பை இன்னும் மு.கா. நிறைவேற்றவில்லை. இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கு நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் வேண்டுமா? தனி மாகாண அலகு வேண்டுமா? என்பதை மு.கா. தலைவர் ஹக்கீம் இன்னும் பகிரங்கமாக அறிவுப்புச் செய்யவும் இல்லை. எல்லாவற்றையும் மூடுமந்திரமாக செய்துவிட்டு, எல்லாம் கைவிட்டுப் போன பிறகு தலையில் அடித்துக் கொள்வது, இந்த விடயத்தில் சரிப்பட்டு வராது.

 
வெளியில் வந்தவை

 
இவ்வாறான பலவீனங்களை கட்சியும் தலைமையும் தளபதிகளும் கொண்டிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் அது வெளியில் வரவில்லை. அவ்வாறு வெளியில் வந்து சொன்னவர்கள் துரோகிகளாகவும் மு.கா.வை அழிப்பதற்கு புறப்பட்டவர்களாகவும் பார்க்கப்பட்டனர் என்பதே வரலாறு. சேகு இஸ்ஸதீன் தொடக்கம் றிசாட் வரை அதுவே போராளிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தியலுமாகும். ஆனால், இரண்டு முக்கிய விடயங்களில் மு.கா. தலைமையின் சாணக்கியம் தவறிப் போனதையடுத்து மேற்சொன்ன எல்லா தவறுகளும் இன்று பொதுத் தளத்தில் பேசுபொருளாக ஆகியிருக்கின்றன. முதலாவது, தேசியப்பட்டியலுக்கு தற்காலிக பாராளுமன்ற உறுப்பினர்களை நியமித்ததில் இடம்பெற்ற முறைகேடு. மற்றையது, செயலாளரின் அதிகாரங்களை பிடுங்கிக் கொண்டமை ஆகும். இன்று மு.கா. தலைவர் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கான உடனடிக் காரணிகளாக இவற்றையே குறிப்பிட முடியும்.

 

அதாவது தேசியப்பட்டியலுக்கு பொருத்தமானவர்களை நியமித்திருந்தால் அல்லது தற்காலிகமாக நியமிக்கப்பட்ட இருவரையும் ஒரு மாதத்திற்குள் பதவி விலக்கி உரியவர்களுக்கு அதைக் கொடுத்திருந்தால் அதேபோன்று செயலாளரின் அதிகாரங்களில் கைவைக்காமல் விட்டிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமானதாக ஆகியிருக்காது.

 
இவ்விடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம், செயலாளர் எம்.ரி.ஹசன்அலியை மட்டும் மனதிற் கொண்டு அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. மாறாக, இனிவரும் காலங்களில் கட்சியின் செயலாளராக வரக்கூடிய நிசாம் காரியப்பர் போன்றோரிடம் அதிகாரங்கள் அதிகம் இருப்பது தமக்கு ஆபத்து எனக் கருதியுமே ஹக்கீம், செயலாளரின் அதிகாரத்தை குறைக்கும் முயற்சியை மேற்கொண்டார் என்பது இரசியமாகும். ஆனாலும், கண்கட்டிவித்தையாக அதைச் செய்தமை மிகவும் தவறான முன்னுதாரணம். இவ்வளவு நடந்தபிறகும் தாம் விட்ட மேற்படி தவறுகளை சரி செய்வதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை ஹக்கீம் இன்னும் மேற்கொள்ளவில்லை என்பதே, இவற்றையெல்லாம விட மிகவும் கவலை தரும் விடயமாக இருக்கின்றது.

 
அரசியல்வாதிகள் ஒன்றும் தவறுக்கு அப்பாற்பட்டவர்களல்லர். அந்தந்த காலத்தின் நிலைவரங்களின் படி எடுக்கப்பட்ட தீர்மானம் பின்னொரு நாளில் பிழையான முடிவுகளாக நமக்கே தெரிய வரலாம். அப்போது அதைத் திருத்திக் கொள்ள வேண்டும். ஆயினும், மு.கா. தலைமை இவற்றுக்கெல்லாம் பிராயச்சித்தம் தேடும் முயற்சியில் ஆமை வேகத்திலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. தலைவருக்கு நிலைமைகளை எடுத்துச் சொல்லி களச் சூழலை சீர்செய்ய வேண்டிய எம்.பி.க்களும் மாகாண சபை உறுப்பினர்களும் உயர்பீட உறுப்பினர்களும் கோள்மூட்டி விடுவதிலும், தமக்கு எதிராக செயற்படுவர்கள் மற்றும் எழுதுபவர்களுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கான தந்திரங்களை சொல்லிக் கொடுப்பதிலுமே கவனம் செலுத்திக் கொண்டிருப்பதாக தெரிகின்றது. இன்று ஹசன்அலியும் பசீரும் வெட்டி வீழ்த்தப்பட்டால் நாளை பைசால் காசிமும் மன்சூரும் இலக்கு வைக்கப்படுவார்கள் என்பதை தளபதிகள் நினைவில் வைக்க வேண்டும். அதேவேளை இன்று உசுப்பேற்றிவிட்டு பிழையாக வழிநடாத்துகின்ற தளபதிகள், நாளை கட்சித்தலைமைக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டால், பாரத்தை தன்மீது போட்டுவிட்டு விலகிக் கொள்வார்கள் என்பதை தலைவர் ஹக்கீம் நினைவிற் கொள்ள வேண்டும்.

 
இவ்வாறு பல தவறுகளைச் செய்திருக்கின்றோம் என்பதை தெரிந்து கொண்டும், வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு காலப்பகுதியிலேனும் அதற்கான தீர்வுகளை தேடுவதை விடுத்து, ஒன்றும் நடக்காதது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு செயற்பட மு.கா. தலைமை முயற்சித்துக் கொண்டிருப்பதால் அவருக்கு எதிரான விமர்சனங்கள் மிக இலகுவாக மக்கள் மயப்படுத்தப்பட்டு விடுவதை காண முடிகின்றது. ஹக்கீம் செய்த பிழைகளாலும், அவற்றை ஆறப்போட்டு ஆற்றுவதற்கு நினைப்பதாலுமே இன்று தலைவரை மாற்ற வேண்டும், கட்சி யாப்பை திருத்த வேண்டும், கட்சியை மீட்க வேண்டும் என்ற இன்னோரன்ன வெளி அழுத்தங்களும் கோஷங்களும் வலுப்பெற்றுக் கொண்டிரூக்கின்றன. தன்மனபோக்கில் போய்க் கொண்டிருந்த அவருக்கு புதுப்புது தலையிடிகள் நாளுக்கு நாள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

 
கிழக்கின் எழுச்சி

KILAKKIN ELUCHCHI
அந்த வகையில், போராளிகளினதும் உட்கட்சி அரசியல்வாதிகளினதும் விமர்சனங்களால் ஏற்படுகின்ற தலையிடிக்கு அவர் பழக்கப்பட்டுப் போய்விட்டார். ஒவ்வொருவரையும் எவ்வாறு வசியம் செய்வது என்பதை ஹக்கீம் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றார். ஆனால், ஹசன்அலியின் விடாப்பிடி, பசீர் சேகுதாவூதின் கடிதம் மற்றும் அறிக்கை ஆகியவை தீராத தலையிடிகளாக இருக்கின்றன. தன்னுடைய முதன்மைத் தெரிவு தேசியப்பட்டியல் எம்.பி. அல்ல என்றும், செயலாளருக்கான அதிகாரங்களை மீள வழங்குமாறும் ஹசன்அலி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்ற சமகாலத்தில், பிரதிநிதித்துவ அரசியலில் இருந்து விலகியிருந்து மு.கா.வை. தூய்மைப்படுத்தப் போவதாக பசீர் சேகுதாவூத் அறிவித்திருக்கின்றார். இவை மு.கா. தலைவரின் காய்நகர்த்தல்களுக்கு பாரிய சவாலாக அமைகின்றன. இந்த வரிசையில் ஆகப் பிந்திய சவாலாக ‘கிழக்கு எழுச்சி’ பிரசார நடவடிக்கை அமைகின்றது. அது பற்றி குறிப்பிட்டேயாக வேண்டியிருக்கின்றது. 

 

‘முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை தற்போதைய தலைமையிடம் இருந்து மீட்டெடுத்தல்’ என்ற தாரக மந்திரத்துடன் கிழக்கின் எழுச்சி பிரசாரம் இப்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கிழக்கை மீட்டல் மற்றும் அஷ்ரஃ;ப் காங்கிரஸை ஸ்தாபித்தல் என்ற பெயர்களிலும் அறியப்படுகின்ற இப்பிரசார வேலைத்திட்டம் நிகழ்காலத்தில் சரிக்கு சமமான ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றிருக்கின்றது. நாம் மேற்குறிப்பிட்ட காரணங்களே இவ்வாறான ஒரு எழுச்சிக்குரல்கள் ஓங்கி ஒலிப்பதற்கு ஏதுவான புறச்சூழலை ஏற்படுத்தி இருக்கின்றது என்பதும், மூன்றே வாரங்களுக்குள் பரவலான அவதானத்தை கிழக்கின் எழுச்சி பெற்றிருக்கின்றது என்பதும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய அடிப்படைகளாகும்.

 
இது முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சிக்கு எதிரான இயக்கமாக அன்றி, றவூப் ஹக்கீமுக்கு எதிரான ஒரு இயக்கமாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றது. மு.கா.வின் முன்னாள் பொருளாளராக இருந்த வபா பாறுக் இதன் தலைவராக பிரகடனம் செய்யப்பட்டுள்ளார். மு.கா.வின் ஸ்தாபக தலைவர் அஷ்ரஃபின் கொள்கைகள், குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் மு.கா.வை வழிநடாத்திச் செல்லாத தற்போதைய தலைவரை அப்பதவியில் இருந்து வெளியேற்றி, கட்சியை கைப்பற்றல் என்பதே இவர்களுடைய பணியிலக்காகும். இதற்கான சந்திப்புக்களையும் திட்டங்களையும் கிழக்கின்; எழுச்சி ஏற்பாட்டாளர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். ஹக்கீமுக்கு எதிரான தரப்பினர் எல்லோரும் இதனை ஆதரிக்கின்றனர். அவருக்கு ஆதரவானோர் எல்லோருக்கும் இது கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இவ்வாறான ஒரு பிரசாரம் முன்னெடுக்கப்படுவதற்கு சாதகமான களநிலைமைகளை ஏற்படுத்தியவர் மு.கா. தலைவர் என்றாலும், கிழக்கின் எழுச்சி எந்தளவுக்கு சாத்தியம் என்பதும் பரிசீலனைக்குரியது.

 
அஷ்ரஃப் காலத்தில் இருந்து இன்று வரை பலர் ஹக்கீமுக்கு எதிரான அரசியல் பிரசாரங்களை முன்வைத்திருக்கின்றனர். ஆனால் அதனால் அவர்களுடைய அரசியல் வெற்றி பெற்றாலும், மு.கா. என்ற கட்சியின் தலைவராக இருந்த ஒரேயொரு காரணத்தால் அஷ்ரஃபையோ ஹக்கீமையோ வீழ்த்த முடியவில்லை. அவர்கள் பற்றிய நன்மதிப்பு குறைந்திருந்தாலும் இன்றுவரை பிரதான முஸ்லிம் கட்சித் தலைவராக ஹக்கீமே இருக்கின்றார். ஆரம்பத்தில் ஸ்தாபக தவிசாளர் சேகு இஸ்ஸதீன் ஒரு புரட்சியை முன்னெடுத்தார். அதன் பிறகு அதாவுல்லா கிழக்கை மீட்பதற்கான பாதயாத்திரையை நடத்தினார். றிசாட் பதியுதீன் குழுவினர் மு.கா.வுக்கு எதிராக அரசியல் செய்தனர், ஹிஸ்புல்லாவும், அமீரலியும், தற்போது முதலமைச்சராக இருக்கின்ற நஸீர் அகமட்டும் வேறுபலரும் கட்சிக்கு சவாலாக அரசியல் செய்தனர். ஆனால், கட்சியை ஹக்கீமிடம் இருந்து கைப்பற்ற முடியவில்லை. இந்த அடிப்படையில் பார்த்தால் கிழக்கின் எழுச்சி வேலைக்கு உதவாது என சிலருக்கு தோன்றலாம். அத்தோடு கட்சிக்கு வெளியில் இருந்து கட்சியை கைப்பற்றுவது என்றால் அதற்கான மூலோபாயங்கள் பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும்.

 
இவ்விடத்தில் ஒன்றை மறந்து விடக்கூடாது, அதாவது மேற்குறிப்பிட்ட எல்லாப் புரட்சிகளின் போதும் மு.கா.வின் தூண்களான பசீரும் ஹசனலியும் தலைவர்களுடன் இருந்தனர். அதேபோன்று அஷ்ரஃப் இப்போது இல்லை என்பதுடன், முன்பிருந்த பலம் பொருந்திய நிலையில் இப்போது ஹக்கீமும் இல்லை. இந்தப் பின்னணியில் ஜனநாயக ரீதியாக, வெளிப்படையாக, சமூகத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் எந்தப் போராட்டமும் மிக இலகுவாக மக்கள் மயமாவதற்கு நிறையவே சாத்தியமிருக்கின்றது. ஆரம்பத்தில் கிழக்கின் எழுச்சி என்பது மு.கா.வுக்கு அழுத்தக் குழுவாக செயற்படும். அப்போதும் மு.கா.வுக்குள் மாற்றங்கள் ஏற்படவில்லை என்றால் இது ஒரு அரசியல் இயக்கமாக பரிணமிக்கலாம். அவ்வாறு அந்தப்பக்க தராசு கனதியானால், இப்போது ஹக்கீமுடன் ஒட்டிக் கொண்டிருக்கின்ற பிழைப்புத் தேடி வந்தவர்கள் ஹக்கீமின் எதிர் பக்கம் தாவி விடமாட்டார்கள் என்று யாராலும் உறுதியாக கூற முடியாது.

 

 

இவ்விடத்தில் மு.கா. தலைவருக்கு ஒரு தெரிவு இருக்கின்றது. அவர் நினைத்தால் இன்று எழுந்திருக்கின்ற அலைகளையும் கோஷங்களையும் மிக இலகுவாக அடக்கி விடலாம். கட்சிக்குள் முறையான கலந்தாலோசனையுடனான கட்டமைப்பை உருவாக்கல், தேசியப்பட்டியல் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல், செயலாளரின் அதிகாரங்களை மீளக் கையளித்தல், கட்சிக்குள் ஜனநாயகத்தை நிலைநாட்டி அதிகாரங்களை பகிர்ந்தளித்தல், கலகெதர தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷையையும் அஷ்ரஃப் காட்டிய அடையாள அரசியலையும் முன்னிறுத்தி செயற்படல் போன்றவற்றை இவற்றுக்கான ஆலோசனைகளாக தலைவர் எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு விரைந்து செயற்பட்டால் நிலைமைகளை கட்டுப்படுத்தி, தனது சாணக்கியத்தை நிரூபிக்க ஒரு வாய்ப்புள்ளது.
தாமதித்தால் தவிக்க நேரிடலாம் !

 
ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 25.06.2015)