விரைவில் ஆனையிறவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – அமைச்சர் தயாசிறி ஜயசேகர

இலங்கையில் தமிழர்கள் நிறைந்த வடக்கு மாகாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு, இளம் கிரிக்கெட் வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு, விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அளித்த பதில்: 

யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான ஆனையிறவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் விரைவில் அமைக்கப்படும். 

வடக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களுக்கு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், விளையாட்டு அரங்கில் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன. 

இதன்மூலம், வடக்கு மாகாணத்தில் இருந்து திறமையான கிரிக்கெட் வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள். 

இந்த ஆண்டு தேசிய விளையாட்டு விழா கிளிநொச்சியில் நடைபெற உள்ளது என்று தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியில் சிங்களவர்கள்தான் தற்போது பெரும்பங்கு வகிக்கின்றனர். 

பிரபல சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், ரஸல் அர்னால்ட் ஆகியோர் மட்டுமே தமிழர்கள். எனினும், அவர்கள் இருவரும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.