ஜனநாயகம் புத்துயிர் பெற வழி ஏதும் உண்டா? : கருணாநிதி கேள்வி

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கவர்னர் உரைக்கு முதல்-அமைச்சர் பதில் கூறும் நாளில், கடைசியாக எதிர் கட்சித் தலைவர் பேசிய பிறகுதான் முதல்-அமைச்சர் கவர்னர் உரைக்குப் பதிலளித்துப் பேசுவது வழக்கம், மரபு. எத்தனையோ ஆண்டுக்காலமாக இந்த மரபுதான் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு அந்த மரபை மாற்றி, எதிர்க்கட்சித் தலைவரை முதல் நாள் பேச விட்டு, மறுநாள் முதல்-அமைச்சர் மட்டும் பதில் கூறுகின்ற பழக்கம் இதுவரை இல்லாத, சட்டமன்றம் பின்பற்றாத ஒரு புதிய ஏற்பாடு.

இதுதான் அ.தி.மு.க. ஆட்சியில் ஜனநாயக மரபுகளைப் பாதுகாக்கும் லட்சணம். அடுத்து, சட்டப்பேரவையில் தி.மு.க. இதுவரை இல்லாத அளவுக்கு 89 பேரைக் கொண்ட மிகப் பெரிய எதிர்க்கட்சியாக இருந்த போதிலும், எதிரிக்கட்சியாக நடந்து கொள்ள மாட்டோம் என்று எதிர்க்கட்சித் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் கூறியதோடு, சில கோரிக்கைகளையும் வைத்தார்.

அதில் முதல் கோரிக்கை, என்னுடைய உடல்நிலை கருதி, நான் அமருவதற்கேற்ற இடவசதி செய்து தரப்பட வேண்டும் என்பதாகும். என்ன செய்தார்கள் தெரியுமா? ஸ்டாலினும் துரைமுருகனும் அமர்ந்திருக்கும் இடத்திற்குப் பின் வரிசையில், அதாவது இரண்டாவது வரிசையில், சக்கர நாற்காலி போக முடியாத இடத்தில், இடவசதி செய்து அல்ல, இடம் ஒதுக்கி அறிவித்தார்கள்.

இரண்டாவது கோரிக்கையாக கவர்னர் உரையில் தி.மு.க. சார்பாக 89 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருப்பதாலும், அதிக எதிர்க்கட்சிகள் இல்லாததாலும், தற்போது கேள்வி நேரத்திற்காக அன்றாடம் ஒதுக்கப்படும் ஒன்றரை மணி நேரம் செலவாகாத காரணத்தினாலும், ஒவ்வொரு நாளும் மூன்று தி.மு.க. உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்புத் தரவேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதையும் ஏற்றுக்கொள்வதற்கான பெருந்தன்மை ஆளுங்கட்சிக்கோ, பேரவை தலைவருக்கோ வரவில்லை. நாள் ஒன்றுக்கு இரண்டு பேர் பேசுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதுவும் அ.தி.மு.க.வின் இறுக்கமான ஒரு வழிப்பாதை ஜனநாயகம்தான்.

கவர்னர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளிக்க வேண்டியவர் முதல்-அமைச்சர். உடல் நிலை காரணமாக முதல்-அமைச்சர் பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டால், முதலமைச்சருக்குப் பதிலாக அவருக்கு அடுத்துள்ள அமைச்சர் பதிலளிக்க வேண்டும். அவ்வாறு பதிலளிக்கப் போகிறவர், கவர்னர் உரை மீதான விவாதம் அவையில் நடக்கின்றபோது, அதுவும் குறிப்பாக எதிர்வரிசையிலே உள்ள உறுப்பினர்கள் பேசும்போது அவையிலே இருந்து, என்ன பேசுகிறார்கள் என்பதை தாங்களே குறிப்பெடுத்து, அதற்குப் பதில் தயாரித்துக் கொண்டு வந்து பேச வேண்டும்.

முடிந்தால் எதிர் வரிசையிலே உள்ளவர்கள் பேசும்போது அவர்களின் கருத்துக்கு முதல்-அமைச்சர் பதில் கூற வேண்டும். ஆனால் இப்போது என்ன நிலைமை? கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெற்ற போது, முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவையிலே எத்தனை மணி நேரம் இருந்தார்? ஒரே ஒரு நாள் மட்டும், அதுவும் ஒரு மணி நேரமோ, ஒன்றரை மணி நேரமோ மட்டும் அவையிலே இருந்து, அப்போதும் கச்சத்தீவு பிரச்சினை மீது பேசுவதற்கு தி.மு.க.வுக்கு, குறிப்பாக எனக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது என்று ஆவேசமாக சண்டமாருதம் செய்து விட்டு, அவையை விட்டுப் போனவர்தான், பிறகு விவாதத்திற்குப் பதில் சொல்கின்ற இறுதி நாள் அன்றுதான் சட்டப்பேரவைக்கே வந்திருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர், மு.க.ஸ்டாலினோ, மற்ற எதிர்க்கட்சி வரிசையிலே உள்ளவர்களோ பேசும் போது, பேரவைக்கே வரவில்லை. இதிலிருந்தே முதல்-அமைச்சர் பேரவையை எந்த அளவுக்கு மதிக்கிறார், எதிர்க்கட்சி உறுப்பினர்களை எந்த அளவுக்குப் போற்றுகிறார் என்பது தெளிவாகிறது என்பதை விட, எந்த அளவுக்கு கட்டிக் காப்பாற்ற வேண்டிய ஜனநாயகத்தைக் காலடியில் போட்டு மிதிக்கிறார் என்பதுதான் தெளிவாகிறது.

இன்னும் சொல்லப்போனால், சட்டப்பேரவையைப் பொறுத்தவரை பேரவைத் தலைவர்தான் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எல்லா உறுப்பினர்களுக்கும் சேர்த்துத் தலைவர். அனைவராலும் மதிக்கப்பட வேண்டியவர். பேரவைத் தலைவர் யாராக இருந்தாலும், அவருக்கு ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களும், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களும் உயரிய மதிப்பு அளித்தாக வேண்டும்.

ஆனால் தமிழகத்திலே சட்டப்பேரவையிலே என்ன நிலைமை? பேரவைத் தலைவரே ஒரு பூங்கொத்தைத் தூக்கிக் கொண்டு, இடுப்பொடியக் குனிந்து, அந்தப் பூங்கொத்தை முதல் அமைச்சரிடம் கொடுத்து வரவேற்கின்ற ஜனநாயகக் கொடுமையை இங்கே தான் பார்க்க முடியும்.

அடுத்து, தமிழகச் சட்டமன்றத்திலே கடந்த முறையும் சரி, இப்போதும் சரி, எதிர்க்கட்சி சார்பில் உறுப்பினர்கள் எந்தக் கருத்தைச் சொல்ல ஆரம்பித்தாலும், உடனே ஏதோ ஒரு அமைச்சர் எழுந்து குறுக்கிட்டு அதற்கு விளக்கம் சொல்ல முயலுவதும், பேச வந்த உறுப்பினரின் நேரம் முடிந்து விட்டதாகக் கூறி பேரவைத் தலைவர் உட்கார வைப்பதும் கொடுமையிலும் கொடுமை.

குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர், மு.க.ஸ்டாலின் பேசத்தொடங்கியதிலிருந்து ஏராளமான குறுக்கீடுகள். குறுக்கீடுகளால் சிறிதும் குலைந்து விடாமல்தான் அவர் தமிழகத்தின் பல பிரச்சினைகளை எடுத்துரைத்தார்.

அதற்கிடையே தமிழகத்திலே நடைபெற்ற, கண்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் கடத்தல்-கரூருக்குப் பக்கத்திலே அமைச்சர்களுக்கு நெருங்கிய அன்புநாதன் என்பவர் வீட்டில் நடைபெற்ற சோதனை-நிதியமைச்சர் மீதே பல ஆண்டு காலமாக நடைபெற்று வரும் வழக்கில், அரசு வக்கீல், தான் அந்த வழக்கிலிருந்து காவல் துறை ஒத்துழைக்காததால் விடுவித்துக்கொள்வதாக நீதிபதிக்கு எழுதிக்கொடுத்துள்ள கடிதம் ஆகியவை பற்றிப்பேச முனைந்த நேரத்தில், அவரைப் பேசுவதற்கே அனுமதிக்கவில்லை.

“இந்தப் பிரச்சினைகள் பற்றிப்பேச வேண்டாம்” என்றால், இதிலே எந்த வார்த்தை அவையிலே பேசக்கூடாத, கண்ணியக் குறைவான, அநாகரீகமான வார்த்தை? இந்த அரசாங்கத்தைக் குறை கூறிக்கூட அல்ல, நாட்டு மக்களுக்கு விளக்கம் தாருங்கள் என்று கேட்கக் கூட பேரவையிலே ஜனநாயகம் அனுமதிக்கவில்லையா?

ஆளுங்கட்சியினர் பக்கம் நேர்மை-நியாயம் இருந்தால் விளக்கம் அளிக்க முன் வர வேண்டியதுதானே? எதற்காக ஜனநாயக ரீதியான அணுகு முறையை கண்டு, ஓட்டம் பிடிக்கிறார்கள்? இதுதான் தமிழகச் சட்டப் பேரவையா? ஜனநாயகத்திற்குப் புறம்பான இப்படிப்பட்ட காட்சிகள்தான் இங்கே தொடர்ந்து அரங்கேறுமா? ஏற்கனவே குற்றுயிரும் குலையுயிருமாகப் போராடிக் கொண்டிருக்கும் ஜனநாயகம் புத்துயிர் பெற வழியேதும் உண்டா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.