பல தசாப்தங்களாக மேற்கிற்கும், தெற்கிற்கும், மத்திக்கும் வாக்குகளை வாரிக்கொட்டிய அனாதைச் சமூகமாக கிழக்கு மற்றும் வடக்கு முஸ்லிம்கள்; நீண்ட கால இரவல் அரசியலின் துர்ப்பாக்கிய நிலையில் சிக்குண்டிருந்தனர்.
புற கிழக்கின் அரசியல் வியாபாரிகளால் பல்வேறு உறைகளுள் வைத்துத், திணித்துத், தீத்தப்பட்ட அரசியல் மிட்டாயானது கிழக்கிலே உதித்த முகாவின் தனித்துவ அரசியல் அடையாளத்தினால் தகர்த்தெறியப்பட்டு கிழக்கு வடக்கு முஸ்லிம்களின் பட்டிதொட்டிகளெல்லாம் அரசியல்மயமாக்கியது.
வேகமாய் வளர்ந்(த்)த மரம் விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படைதாரிகளின் சதித்தாக்குதலுக்கு அறநாயக்காவில் பலியான தாணைத் தலைவனின் அஸ்தமனத்துடன் திசைமாறி பழைய குறுடி கதவைத் திறடி என்றாகிப்போனது.
அப்போதைய அரசின் அசமந்தப்போக்கும், முஸ்லிம்களின் அரசியல் எழுச்சி மீதான புலிகளின் காழ்ப்புணர்வின் உச்சக்கட்டமும், முகாவின் சுவீப் தலைமையின் பீதி மௌனமும் எமது முஸ்லிம் தேசிய அரசியலை பலபடி பின்னோக்கிடச் செய்தது.
பதினேழு வருடங்கள் அரசியல், சமூக மற்றும் முஸ்லிம் தேசியம் தொடர்பான எந்தத் திட்டவரைவோ, தூர சிந்தனையோ அற்ற ஹகீம் முஸ்லிம் தேசியவாதிகளையும், கிழக்கின் தலைமைகளையும் திட்டமிட்டு ஓரங்கட்டியே வந்தார்.
ஹகீமின் தலைமையில் முஸ்லிம் சமூகம் சாதித்த அரசியல் சாதனைகளோ அபிவிருத்திச் சேவைகளோ இருக்குமா என்றால், பூச்சிமே.
எமது வாக்குகளைச் சூறையாடி வியாபாரம் செய்து தன்னையும் தனது குடும்பத்தையும் மாத்திரம் பார்த்துக் கொள்ளும் அந்நியப்பட்டவொரு அரசியல், குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களை மடையர்களாக்கிக் குளிர்காயும் மேட்டுக் குடியினருக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது ‘கிழக்கின் எழுச்சி’.
எமது கிழக்கின் வாக்குகளால் அரசியல் முகவரியோடும், அந்தஸ்தோடும் எம்மைப் பலிக்கடாக்களாகப் பாவிக்கும் ஹகீம், மேலும் அவரின் ஒரு சில முகவர்களால் பிரதேசவாதச் சாயம் பூசப்பட முனையும் எமது ‘கிழக்கின் எழுச்சி’ கிழக்கு மக்களின் பார்வையில் ”சுயநிர்ணயப் போராட்டமாகவே” சுவாசிக்கப்படுகின்றது.
ஆக,
கிழக்கின் எழுச்சியால் மரத்தை மீட்போம்.
சுய நிர்ணயம் காப்போம்.
மருத நகர்
அலி அப்துல்லாஹ்.