நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவல் அறியும் சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரும் ஒன்றினைய வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பல்வேறு சந்தர்பங்களில் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டிருந்தது. எனினும், அதனை நிறைவேற்றிக் கொள்ள எம்மால் முடியாமல் போனது. ஐக்கிய தேசிய கட்சி – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து முன்னெடுத்துச் செல்லும் இந்த நல்லாட்சி அரசிலே இந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும்- என அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
தகவல் அறியும் சட்டமூலத்தை அமுல்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கடந்த பொதுத் தேர்தலின் போது வாக்குறுதி வழங்கியிருந்தனர்.
இருப்பினும் பல்வேறு சவால்கள் – எதிர்ப்புக்களினால் ஒன்றரை வருடங்கள் கடந்தும் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவர முடியாத நிலைக்காணப்பட்டது. எனினும், ஜனாதிபதி – பிரதமரின் விசேட பணிப்புரைக்கமைய இன்று அது நாhடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகின்றது.
நிலையான ஜனநாயகத்துக்கு தகவல் அறியும் சட்டமூலம் அத்தியவசியமானது. ஊழல், மோசடிகள் அற்ற நாட்டைக் கட்டியெழுப்பவும் தகவல் அறியும் சட்டமூலம் பிரதான பங்கு வகிக்கின்றது. எனவே, இதனை நிறைவேற்றிக் கொள்ள கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றினைய வேண்டும்- எனத்தெரிவித்தார்.