சுஐப் எம்.காசிம்
சர்வதேச கூட்டுறவு தினம் அடுத்த மாதம் ஜூலை 02 ஆம் திகதி கொழும்பு, தாமரைத் தடாகத்தில் கொண்டாடப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராகப் பங்கேற்கவுள்ளதாகவும் கைத்தொழில்,வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று(23/06/2016) அறிவித்தார்.
மாகாண கூட்டுறவு மற்றும் கைத்தொழில் அமைச்சர்களின் ஒன்றுகூடல், சர்வதேச கூட்டுறவு வாரம் ஆகியவற்றை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் அமைச்சர் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நலிவடைந்து போயிருந்த கூட்டுறவுத் துறையை புத்துயிர் ஊட்டும் வகையில் நாம் அமைத்த விஷேட செயலணி, இந்தத் துறையில் ஏற்பட்டிருக்கும் குறைபாடுகள், பிரச்சினைகள், சவால்கள், எதிர்காலத்தில் இதனை மேம்படுத்தும் வழிவகைகள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. இந்த அறிக்கை தமிழ் மொழியிலும் வழங்கப்படவுள்ளது.
மாகாண கூட்டுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் இன்றைய நிகழ்வில் இதனை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாகாண கூட்டுறவு அமைச்சர்களுடன் இணைந்து இந்தப் பணியை விஸ்தரிப்பதே எமது நோக்கமாகும்.
13வது திருத்தத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட மாகாண முறையை அடுத்து, இலங்கையில் செயற்பாட்டிலிருந்த பெரும்பாலான கூட்டுறவுச் சங்கங்களை தற்போது மாகாண சபையே நிர்வகித்து வருகின்றது. எனவே, மாகாண கூட்டுறவுத் துறையுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் நாம் வெற்றிகரமான மாற்றங்களை செய்ய முடியுமென நம்புகின்றோம்.
மக்கள் வாழ்வுடன் தொடர்புடைய, மக்களுக்கு சிறந்த பயனளிக்கக் கூடிய இந்தத் துறையில் நமது இளைஞர்கள் ஆர்வம்காட்டத் தயங்குகின்றனர். இதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அவர்களையும் கூட்டுறவுத் துறையில் உள்வாங்குவதன் மூலமே இந்தத் துறையை பலமான துறையாக கட்டியெழுப்ப முடியும் என்பதே எனது கருத்து.
10 இலட்சம் பேருக்கு அடுத்த ஐந்து ஆண்டுக்குள் தொழில் வழங்க முடியும் என்ற அரசின் கருத்திட்டத்துக்கு, கூட்டுறவுத் துறையும் பாரிய பணியாற்றக் கூடிய வகையில் எம்மை நாம் தயார்படுத்த வேண்டியுள்ளது. இந்தத் துறையில் எவ்வாறு உச்சபயனைப் பெறலாம் என்பது குறித்து நாம் அதீத கவனம் செலுத்தி வருகின்றோம். மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையாவது மாகாண அமைச்சர்களுடன் கலந்தாலோசனை செய்து இந்தத் துறையை முன்னேற்ற நடவடிக்கை எடுப்போம்.
பொல்கொல்லையில் இயங்கிவரும் சிங்கள மொழி மூலமான கூட்டுறவுப் பாடசாலையைப் போன்று, தமிழ் மொழியிலும் இந்த ஆண்டு முடிவதற்குள் பாடசாலை ஒன்றை நிறுவ உத்தேசித்துள்ளோம். அதேபோன்று கூட்டுறவுத் துறையில் இலங்கையில் டிப்ளோமா பட்டங்களை மாத்திரமே பெற முடியுமென்ற நிலையை மாற்றி, கூட்டுறவுத் துறையில் பட்டப் படிப்பை மேற்கொள்வதற்காக மலேசியா பல்கலைக்கழகம் ஒன்றுடன் ஆலோசனைகளை நடத்தி வருகின்றோம்.
இந்த நிகழ்வில் ஆர்வம்கொண்டு பங்குபற்றிய மத்திய மாகாண முதலமைச்சர், மாகாண முதலமைச்சர்கள் மற்றும் வடமாகாண முதலமைச்சரின் பிரதிநிதி ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.