எல்லாம் அறிந்தவர் என்று இவ்வுலகில் யாருமே இருக்க முடியாது

மூஸா (அலை) மக்களுக்கு போதனைகள் செய்து வந்தார்கள். ஒருநாள் கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து “மூஸாவே! உங்களைவிட அறிவில் சிறந்தவர், எல்லாம் அறிந்தவர் இந்த உலகத்தில் இருக்கிறார்களா?” என்று கேட்டார். அதற்கு மூஸா (அலை) “இல்லை” என்று சொல்லிவிட்டார்கள். தம் மனதில் ‘நம்மைவிட அதிகம் தெரிந்தவர் யாரும் இருக்க முடியாது’ என்றும் நம்பினார்கள்.

ஆணவத்தை விரும்பாத இறைவன் உடனே ஓர் இறைச்செய்தியை மூஸா (அலை) அவர்களுக்கு அனுப்பினான் ‘எல்லாம் அறிந்தவர் என்று இவ்வுலகில் யாருமே இருக்க முடியாது. அது இறைத்தூதராக இருந்தாலும் சரியே. ஒருவருக்குத் தெரியாத விஷயம் மற்றவருக்குத் தெரிந்தே இருக்கும். ஒருவரை ஒருவர் அறிவில் சிறந்திருப்பது இயல்பு. என்னுடைய அடியார் கிதிர் அறிவில் சிறந்தவர்’ என்று அறிவித்தான்.

உடனே மூஸா (அலை) அவர்களுக்கு அவரைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. அவரைச் சந்திக்கும் வழி என்னவென்று இறைவனிடம் கேட்டார்கள். அதற்கு இறைவன் ஒரு மீனை அவர்களுக்கொரு அடையாளமாக ஏற்படுத்தினான். “அந்த மீனைத் தொலைக்கும் இடத்தில் அவரைக் காண்பீர்கள்” என்றும் சொல்லிவிட்டான்.

மூஸா (அலை) தன்னுடன் ஓர் இறைநம்பிக்கையாளரைப் பணியாளராகத் தம்முடன் அழைத்துக் கொண்டு மீனை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.

இரு கடல்களும் சேரும் இடத்தை அடைந்ததும் அங்கு சிறிது ஓய்வெடுக்கலாம் என்று கண் அயர்கிறார்கள் மூஸா (அலை).

அந்த இடத்தில் பாத்திரத்திலிருந்த மீன் கடலில் துள்ளிக் குதித்து நீந்திச் சென்றுவிடுகிறது. இதனைக் கண்ணுற்ற பணியாளர் இதுபற்றி மூஸா (அலை) அவர்களிடம் சொல்ல மறந்துவிடுகிறார். ஓய்விலிருந்து எழுந்து மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார்கள் மூஸா (அலை).

சிறிது தூரம் சென்ற பிறகு, “காலை உணவைச் சாப்பிடலாம். எடுத்து வாருங்கள்” என்றார்கள் மூஸா (அலை). அப்போதுதான் அந்த மீனைப் பற்றி நினைவு வந்தவராக அப்பணியாள் ‘அக்கற்பாறையில் நாம் ஓய்வெடுத்த சமயத்தில் மீன் துள்ளிச் சென்றுவிட்டது’ என்று கூறினார். ‘ஆஹா, அதுதான் நாம் தேடிவந்த இடம்’ என்று கூறி இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி வந்த வழியே திரும்பிச் சென்றார்கள்.

இவ்வாறு அவ்விருவரும் இறைவனின் நல்லாடியார்களில் ஒருவரை அங்கு கண்டார்கள்.

திருக்குர் ஆன் 18:60-65, ஸஹீஹ் புகாரி 74, 78.

– ஜெஸிலா பானு.