பனூ இஸ்ராயீலர்களில் ஓர் இறைநம்பிக்கையாளர் இருந்தார். அவர் மிகப் பெரிய பணக்காரராகத் திகழ்ந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அந்த முதியவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு அவருடைய சகோதரனின் மகன் அவரை யாருக்கும் தெரியாமல் கொலை செய்து அவருடைய சடலத்தை வேறு குலத்தவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் கொண்டு போட்டுவிட்டு வந்துவிடுகிறார்.
மறுநாள் பிணத்தைக் கண்ட மக்கள் பீதியடைந்து இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களிடம் ஓடி வந்து, “மூஸாவே! நம் குலத்தைச் சேர்ந்தவரை யார் கொலை செய்தார்கள் என்று உம் இறைவனிடம் கேட்டுச் சொல்லுங்கள்” என்றனர்.
மூஸா (அலை), அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். இறைவனின் கட்டளையை மக்களுக்கு விவரித்தார்கள் “ஒரு மாட்டை அறுத்து அதன் ஒரு பகுதியின் இறைச்சியை இறந்தவரின் உடலில் தேய்த்தால், இறந்தவர் உயிர் பெற்று எழுந்து, தன்னைக் கொன்றவர் யார் என்று சொல்வார்” என்று சொன்னார்கள்.
இதனைக் கேட்ட மக்கள் எரிச்சலடைந்தவர்களாக “மூஸாவே! எங்களைக் கிண்டல் செய்து பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?” என்று கேட்டனர். இறைவனின் கட்டளையை அப்படிச் சொன்னவுடன் மூஸா (அலை) “அப்படி அறிவில்லாமல் பரிகசிக்கும் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ் காப்பாற்றுவானாக” என்று கூறினார்கள்.
மூஸா (அலை) உண்மையில்தான் அதைச் செய்யச் சொல்கிறார்கள் என்று புரிந்தவர்களாக. “அது எப்படிப்பட்ட மாடாக இருக்க வேண்டுமென்று இறைவனிடம் கேட்டுச் சொல்லுங்கள்” என்றனர். “அப்பசுமாடு அதிகக் கிழடாகவும் இருக்கக் கூடாது, கன்றாகவும் இருக்கக் கூடாது. இரண்டிற்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும்” என்றார்கள் மூஸா (அலை).
அடுத்ததாக அதனுடைய நிறத்தைப் பற்றிக் கேட்டார்கள். அதற்கும் சளைக்காமல் “பார்ப்பவர்களைப் பரவசம் செய்யும் நிறமாக இருக்க வேண்டும்” என்று விளக்கமளித்தார்கள். அதுமட்டுமின்றி “அது நிலத்தில் உழவோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாத ஆரோக்கியமான, எவ்விதத்திலும் வடுவில்லாததாக இருக்கும்” என்றும் இன்னும் மிக விவரமான தகவல்களையும் தந்தார்கள் மூஸா (அலை).
இறைவன் மீது உண்மையான நம்பிக்கைக் கொண்டவர்களாக யூதர்கள் இருந்திருந்தால் மூஸா (அலை) ஒரு மாட்டை அறுத்து, கொல்லப்பட்டவனின் மீது அடித்தால் இறந்தவன் உயிர் பெற்று, தன்னைக் கொன்றவனை அடையாளம் காட்டுவான் என்று இறைவனின் கட்டளைப் பற்றிச் சொன்னதும் ஒரு மாட்டை அறுத்திருப்பார்கள். ஆனால் நம்பிக்கையற்ற அவர்கள் தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு தமக்குத் தாமே சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.
இறைவனின் அத்தாட்சிகளைக் கண்கூடாகப் பார்த்தும் அவர்கள் இதயங்கள் இறுகிவிட்டிருந்தது. திருமறையில் இறைவன் “யூதர்களில் ஒருசாரார் இறைவாக்கைப் புரிந்து கொண்டும் அதைத் தெரிந்து கொண்டே அதை மாற்றிவிட்டார்கள். ஆனால் நம்பிக்கைக் கொண்டவர்களை அவர்கள் சந்திக்கும்போது தாமும் நம்பிக்கைக் கொண்டவர்களாகச் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் தவ்ராத்தையும் அவர்கள் பின்பற்றுவதில்லை” என்கிறான்.
இந்நிகழ்ச்சியின் காரணமாகத்தான் திருக்குர்ஆனின் இரண்டாம் அத்தியாத்திற்கு ‘சூரத்தல் பகரா’ அதாவது ‘மாடு’ என்று பெயர் வந்தது.
இறைவன் அருளிய தவ்ராத்தில் உள்ளவற்றை அவர்கள் சிலவற்றை மறைத்தும், சிலவற்றை மாற்றியும்விட்டனர். எவர் தீமையைச் சம்பாதித்து, அந்தக் குற்றம் அவரைச் சூழ்ந்து கொள்கிறதோ, அத்தகையோர் நரகவாசிகளே. எவர் நம்பிக்கை கொண்டு நல்ல காரியங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கி இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 2:67-82
ஜெஸிலா பானு.