நாட்டின் பொருளாதார நிலமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (17) அலரி மாளிகையில் வைத்து விஷேட உரை ஒன்றை நிகழ்த்தி இருந்தார்.
தனது விஷேட உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியதாவது,
ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதிக்கான தடை நேற்று நீக்கப்பட்டது.
நாம் அதிகாரத்திற்கு வந்தால் இந்த தடையை நீக்குவதாக 2014ம் ஆண்டு கூறினோம்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துச் சென்றோம். அதன் பிரதிபலன் நேற்று கிடைத்தது.
அன்று இல்லாமல் போன இந்த உரிமையை மீண்டும் பெற்றுக் கொடுத்துள்ளோம்.
இப்போது மீன்பிடித் துறையை நவீனப்படுத்தி நாம் அன்று கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்.
அதேபோல் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளப் பெறுவதாக ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நாம் வாக்குறுதி அளித்தோம்.
அதன்படி ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் உத்தியோகபூர்மற்ற பேச்சுவார்த்தைகள் தற்பொழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அதனை பெற்றுக் கொள்வதற்கு நிறைவேற்ற வேண்டிய தேவைகள் குறித்து பேசி வருகின்றோம்.
இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்துவிட்டு அதற்கான விண்ணப்பத்தை பிரஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக காரியாலயத்தில் ஒப்படைப்போம்.
எவ்வாறாயினும் சந்தேகமின்றி இந்த ஆண்டு இறுதிக்குள் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வோம்.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக்கொண்டால் ஆடைத் தொழில்துறை, மீன்பிடித்துறை, தேயிலை உற்பத்தி உள்ளிட்ட பல தொழில் துறைகளுக்கு நன்மை கிடைக்கும்.
அது மட்டுமன்றி வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இலங்கைக்கு வருவார்கள் என்று பிரதமர் தனது விஷேட உரையில் கூறினார்.