மே மாதம் கடலில் விழுந்த எகிப்து விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தது!

201606171452581836_Black-box-from-crashed-EgyptAir-plane-retrieved_SECVPF

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு 66 பேருடன் ‘எகிப்து ஏர்’ நிறுவனத்தின் பயணிகள் விமானம் கடந்த மே மாதம் 19-ம்தேதி புறப்பட்டது. இந்த விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் பறந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மாயமான அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாக சில மணி நேரத்தில் தெரியவந்தது.

இரண்டு நாட்கள் தேடுதலுக்குப் பிறகு எகிப்தின் அலெக்சாண்ட்ரியா நகரில் இருந்து 290 கி.மீட்டர் தொலைவில் விமானத்தின் பாகங்களும் பயணிகளின் உடல் பாகங்களும் கடலில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், எந்த உடல்களும் முழுமையாக மீட்கப்படவில்லை. விமானத்தின் கருப்பு பெட்டிகளும் கிடைக்காமல் இருந்தது. கடலுக்கடியில் கிடப்பதாக கூறப்படும் விமானத்தின் முக்கிய பாகங்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வரும் 23-ம் தேதிக்குள் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்காவிட்டால் அதில் உள்ள தகவல்களை மீட்க முடியாது என்று முன்னர் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டிகளில் ஒன்றுமட்டும் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொரீஷியஸ் நாட்டுக்கு சொந்தமான மீட்பு கப்பல் குழுவினர் கண்டுபிடித்துள்ள இந்த கருப்பு பெட்டியில் உள்ள விபரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக எகிப்து விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடுவானில் அந்த விமானம் வெடித்து சிதறியதாக ஒருயூகம் உலவிவரும் நிலையில் அந்த பெட்டியில் உள்ள குரல் பதிவுகள் இந்த விபத்து தொடர்பான விசாரணையில் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, அந்த விமானத்தின் மேலும் ஒரு கருப்பு பெட்டியை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.