ஈராக்: ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த பலுஜா நகரை அரசுப் படைகள் கைப்பற்றின!

201606171456584141_Iraqi-forces-take-Falluja-government-building-from-Islamic_SECVPF

ஈராக் மற்றும் சிரியா நாட்டின் சிறுபகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கு வசிக்கும் பொதுமக்களை சித்ரவதைப்படுத்தியும், குடும்பப் பெண்களை பாலியல் அடிமைகளாக சிறைபிடித்தும் கொடுமைப்படுத்தி வருகின்றனர்.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்த சில முக்கிய நகரங்களை அந்நாட்டு ராணுவம் மீட்டுள்ளது. இதேபோல் ஈராக்கிலும் அவர்களிடம் பறிகொடுத்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் ராணுவம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் முக்கிய நகரங்களில் ஒன்றான பலுஜா நகரின்மீது தரைப்படை மற்றும் விமானப்படைகளின் மூலம் அதிரடி தாக்குதல் நடத்தி, தீவிரவாதிகளை விரட்டியடிக்க ஈராக் அரசு தீர்மானித்தது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் பாதிக்காதிருக்கும் வகையில் பலுஜா நகரில் வாழ்ந்துவரும் மக்களை தற்காலிகமாக அங்கிருந்து வெளியேறும் வகையில் தயாராக இருக்குமாறு ஈராக் அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தீவிரவாதிகளுடன் சண்டையிட்டபடி முன்னேறிச் சென்ற அரசுப் படைகள் பலுஜா நகரின் மையப்பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த உள்ளூர் நகராட்சி கட்டிடத்தை இன்று கைப்பற்றியுள்ளன. அந்த கட்டிடத்தின்மீது தற்போது ஈராக் நாட்டு தேசியக்கொடி பறக்க விடப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.