இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவி தொடர்ந்தும் அர்ஜூன் மகேந்திரனுக்கு வழங்கப்பட மாட்டாது என சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இணை அமைச்சரவை பேச்சாளருமான அவர் இதனை கூறியுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.இதற்கு பதிலளித்த அமைச்சர், ஜனாதிபதி இது தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக கூறியுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் நியமிக்கப்பட்டதில் இருந்து நான் அதனை எதிர்த்து வருகின்றேன். அவரது பதவிக்காலம் நீடிக்கப்படுவது குறித்து நல்லாட்சி அரசாங்கம் நல்லாட்சி தீர்மானம் ஒன்றை எடுக்கும்.சில நோக்கங்களை நிறைவேற்றவே அரசாங்கங்கள் பதவிக்கு வருகின்றன.
அவற்றை நிறைவேற்ற முடியாத அரசாங்கம் வீழ்ந்தாலும் பிரச்சினையில்லை.ஜனவரி 8 ஆம் திகதி கொண்டிருந்த நிலைப்பாட்டிலேயே நான் இன்னும் இருக்கின்றேன்.
வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், மக்கள் நாடாளுமன்ற சம்பிரதாயம் தொடர்பில் வெறுப்படைவார்கள்.
அரசாங்கம் தவறு செய்யும் போது, மக்கள் ஆயுதப் போராட்டங்களுக்கு செல்வார்கள் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.