பெருந்தோட்டங்களில் நிலவும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர்கள் கலந்துரையாடல்

க.கிஷாந்தன்

 

அரச பெருந்தோட்ட நிறுவனங்களான மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை, அரச பெருந்தோட்ட யாக்கம் மற்றும் எல்கடுவ பிளாண்டேசன் ஆகியவற்றின் கீழ் இயங்கும் பெருந்தோட்டங்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களுக்கும் அரச பொது நிறுவனங்கள் அமைச்சர் கபிர் ஹசீம் ஆகியோரிடையே இடம்பெற்றுள்ளது.

340A0420_Fotor

 

மேற்படி நிறுவனங்களின் கீழ் இயங்கும் பெருந்தோட்டங்களில் நிலவும் ஊழியர் சேமலாப நிதி நிலுவைகள் செலுத்தாமை, மாதந்தோறும் உரிய தினத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமை, வீடமைப்புக்கான காணிகளை உரிய முறையில் பெற்றுக் கொடுக்காமை மற்றும் நிவாரணக் கொடுப்பனவாக பிராந்திய கம்பனிகள்இணங்கிக் கொண்டுள்ள 2500 நிவாரணப்படியை குறித்த தோட்டத் தொழிலாளர்களுக்கும் பெற்றுக் கொடுத்தல் முதலான விடயங்கள் குறித்த கலந்துரையாடலில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட விடயங்களுக்கு தீர்வு கானும் பொருட்டு அமைச்சு செயலாளர் தலைமையில் மூன்று நிறுவனங்களினதும் தலைவர்களையும் கொண்ட குழுவினை அமைத்து இடைக்கால தீர்வினையும் காண்பதற்கும் நீண்டகாலஅடிப்படையில் அரச பெருந்தோட்டங்களின் கீழ் இயங்கும் நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் அதன் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் பிரதித் தலைவர்களான அமைச்சர் திகாம்பரம், ராஜாங்க அமைச்சர் வே.ராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான வேலு குமார், எம்.திலகராஜ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அரச பொது முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபிர்ஹாசிம், பிரதி அமைச்சர் ஹெரான் விக்கிரமரத்ண மற்றும் அமைச்சு செயலாளர் மற்றும் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, மக்கள் பெருந்தோட்ட யாக்கம் மற்றும் எல்கடுவ பிளாண்டேசன் நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டனர்.