தலீபான்களின் மறைவிடங்கள் மீது குண்டுவீச்சு நடத்துங்கள் : பாகிஸ்தான் அமெரிக்காவிடம் கோரிக்கை

pakistan_US_flag_Fotor

 

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படையின் தளபதி ஜான் நிக்கல்சன், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ரிச்சர்ட் ஆல்சன் ஆகியோரை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ரஹீல் ஷெரீப் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்ட பின்னர் இப்படி ஒரு சந்திப்பு நடந்திருப்பது இதுவே முதல் முறை ஆகும். 

இந்த சந்திப்பின்போது அவர்களிடம், ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தலீபான்கள் மற்றும் அவர்களின் தளபதியான முல்லா பஸ்லுல்லா ஆகியோரின் மறைவிடங்களை கண்டுபிடித்து அமெரிக்கா குண்டுவீச்சு நடத்த வேண்டும் என்று ரஹீல் ஷெரீப் வலியுறுத்தி கூறினார். 

அத்துடன் பாகிஸ்தானில்-பலுசிஸ்தான் பகுதியில் அமெரிக்கா நடத்தி வரும் ஆளில்லா விமான தாக்குதலுக்கு ஜெனரல் ரஹீல் ஷெரீப் மிகுந்த கவலை தெரிவித்தார். இது பாகிஸ்தானின் இறையாண்மையை மீறிய செயல் என கூறி, அவர் கண்டித்தார். ஆப்கானிஸ்தானின் ஸ்திரமற்ற நிலைக்கு பாகிஸ்தானை குற்றம் சாட்டுவது துரதிர்ஷ்டவசமானது எனவும் அவர் விமர்சித்தார்.