தண்ணீர் கேட்டுப் போன இஷாக்கிற்கு தண்ணி காட்டிய ரவுப் ஹக்கீம்

ஏ.எச்.எம்.பூமுதீன்
அநுராதபுர மாவட்ட முஸ்லிம்களின் பாரிய பிரச்சினைகளில் ஒன்று குடிநீர் பிரச்சினை. இப்பிரச்சினை என்பது இன்று நேற்று ஆரம்பித்த ஒன்றல்ல. அம்மாவட்டத்தில் முஸ்லிம்களின் குடியேற்றத்தோடு ஆரம்பமான பிரச்சினை ஆகும்.
வடமத்திய மாகாண சபையின் முகா உறுப்பினராக மிக நீண்டகாலம் பதவி வகித்தவர் ராவுத்தர் நெயினா முகம்மட். இவர் நினைத்திருந்தால் அவரது வடமத்திய முதலமைச்சர்  ஊடாகவோ அல்லது தனது தலைவர் ஹக்கீமின் அனுசரனையுடன் மத்திய அரசின் ஊடாகவோ இப்பிரச்சினைக்கு ஓரளவு தீர்வை பெற்றுக் கொடுத்திருக்க முடியும்.
ஏன் ஆகக்குறைந்தது தற்போது கூட இக் குடிநீர் பிரச்சினைக்கு தீர்;வு காணக்கூடிய அமைச்சராக இருக்கின்ற  ஹக்கீமைக் கொண்டு அல்லது ஹக்கீமோ இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முற்பட்டிருக்கலாம்.
இவற்றிற்கு மத்தியில் தான், இஷாக் எம்பி  பிரதிநித்துவப் படுத்தும் தனது மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில், அதற்கான தீர்வினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் தான் கடந்த  செவ்வாய்க் கிழமை ஹக்கீமை நாடிச் சென்றிருந்தார் .
அ.இ.ம.கா எம்பி இஷாக் நீர்வழங்கல் அமைச்சர் ஹக்கீமை சந்திக்கச் சென்ற வேளை இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மலேசிய தூதுவர் ஹக்கீமுடனான உத்தியோகபூர்வ சந்திப்பை முடித்து விட்டு உத்தியோகபூர்வ புகைப்படம் ஒன்றை எடுப்பதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
ஏற்கனவே ஹக்கீமிடம் அனுமதி பெற்றிருந்த இஷாக் எம்பி, ஹக்கீமின் காரியாலயத்திற்கு சென்ற போது எதேர்ச்சையாக இஷாக்கை கண்ட ஹக்கீம் ‘நீங்களும்  வாருங்களேன் புகைப்படம் எடுத்துக் கொள்வோம்’ என்று கோரியதற்கிணங்கவே இஷாக் எம்பியும் மரியாதை நிமிர்த்தமாக அந்த புகைப்படத்தில் இணைந்து கொண்டார். இது தான் நடந்த சம்பவம்
இந்த புகைப்படத்தை வைத்துத்தான் முகா வின் முகநூல் மற்றும் இணையத்தள போராளிகள் அ.இ.ம.கா எம்பி இஷாக் – முகாவுடன் இணைந்து விட்டார் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்திருந்தனர்.
உண்மையில், முகா தரப்பினருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறு இஷாக் எம்பியை அழைத்த ரவூப் ஹக்கீம் தான், இப்புகைப்படத்தினை தனக்கு நெருக்கமான முகநூல் இணையத்தள போராளிகளுக்கு அனுப்பி வைத்து ‘ ரிசாதின் கட்சியைச் சேர்ந்த இஷாக் எம்பி எம்முடன் இணைந்து விட்டார்’ என்று பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்தத் தகவலை – முகா தலைவர் ஹக்கீமுக்கு என்றும் மிக அருகில் இருக்கும் அவருக்கு மிகவும் விசுவாசமான நபர் ஒருவர் இன்று காலை என்னிடம் தெரிவித்ததுடன் மட்டுமன்றி ‘எங்கட தலைவர் தண்ணீர் கேட்டு வந்த இஷாக் எம்பிக்கு தண்ணீ காட்டிவிட்டார்’ என்று நகைச்சுவையுடன் கூறினார்.
ஹக்கீமின் அந்த நெருக்கமான நபர் கூறிய அந்த நகைச்சுவை வசனத்தைத்தான் இந்த விடயத்திற்கு தலைப்பாகவும் நான் இட்டுள்ளேன்.
இஷாக் எம்பியை அழைத்து அவரது புனிதமான நோக்கத்தை கொச்சைப் படுத்தி அவரைக் கட்சி மாறியதாக வெளிப்படுத்த ஹக்கீம் எடுத்த முயற்சியை விடுத்து – உண்மையாகவே அநுராதபுர மாவட்ட முஸ்லிம்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்காவிட்டாலும் பரவாயில்லை தீர்ப்பதற்காகவாவது கடந்த ஒருவருடத்தை பயன்படுத்தியிருந்தால் கூட இந்த ரமழான் மாதத்தில் பல கோடி நன்மைகளை அவர் பெற்றுக் கொண்டிருப்பார்.  
இதே நேரம் இலங்கை அரசியல் வரலாற்றிலேயே அநுராதபுர மாவட்டத்திற்கு முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநித்துவம் இல்லாத குறையை இஷாக் எம்பி மூலம் கடந்த பாராளுமன்றத் தேர்தல் ஊடாக அ.இ.ம.கா தலைவர் ரிசாத் பதியுதீன் தீர்த்து வைத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.