புதிய அரசியல் யாப்பு மூலம் எதிர்காலம் வரை நீடிக்க கூடிய வகையிலான, நிதானமான தீர்வினையே தமிழ் மக்கள் எதிர்ப்பார்கின்ற படியால், அத் தீர்வினை பெற்றுக்கொள்ளக் கூடிய வழிகளை அரசாங்கம் வகுக்க வேண்டுமென பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌவ்ரிஸ்ஸிடம் (James Duaris ) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழிற்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இன்று வெள்ளிக்கிழமை காலை வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
அந்த சந்திப்பின் போது, வட மாகாணத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் சமாதானம் ஏற்படுவது சம்பந்தமாகவும், சமாதான நடவடிக்கைகள் எந்தளவிற்கு நன்மை அளித்துள்ளது என்பது பற்றியும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் விரிவாக ஆராய்ந்துள்ளார்.
இதுவரை காலமும் மத்திய அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட சட்டங்கள், எடுத்துக்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் நன்மை பயப்பதாக இருப்பதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏற்றுக்கொள்கின்றேன். அதில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை என்று பதிலளித்ததுள்ளார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.
பின்னர் வடமாகாண மக்களின் பிரச்சினைகள் என்ன என்று வினவியுள்ளார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தாமதம் ஏற்பட்டுக்கொண்டிருப்பதுடன், தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடாமல் நடவடிக்கைகள் மேற்கொள்வதும், செயற்திட்டங்கள் செயற்படுத்தப்படுவதும், பிரச்சினைகளைத் தருகின்றன என்று முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.
அரசியல் யாப்பு குறித்து எவ்வாறான தீர்மானங்களையும் எதிர்பார்ப்புக்களையும் கொண்டுள்ளீர்கள் என்று பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
எமது தீர்மானங்களை பாராளுமன்ற சபாநாயகரிடம் கையளித்துள்ளோம். ஆனால், எமக்கு போதுமான அளவு சுயாட்சிக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளேன். வடமாகாண மக்களையும் ஏனைய மாகாண மக்களையும் நேரடியாக எடுத்துப் பார்த்தால் எமது மக்களிடையே வேற்றுமைகளும் வித்தியாசங்களும், பலவிதத்தில் காணப்படுகின்றன.
மதம், மொழி, இடம், கலாசாரம், பண்பாடுகள் குறித்து பல வேற்றுமைகள் இருக்கின்றன. இவ்வாறு இருக்கும் போது, எமது பின்புலத்தினை அண்டியும், அதற்கு ஏற்றவாறும், நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், எமது பொருளாதார விருத்தியை நாமே நடைமுறைப்படுத்தவும், எமக்கு இடமளிக்கப்பட வேண்டும்.
அதில் மத்திய அரசாங்கத்தின் உள்ளீடுகள் குறைவாக இருக்க வேண்டுமென்றும் அவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் அரசியல் யாப்பு மாற்றங்கள் ஏற்பட வேண்டுமென்றும், அந்த மாற்றங்களை ஏற்படுத்தாவிடின், தொடர்ந்தும் இந்தப் பிரச்சினைகள் எதிர்காலத்திலும் நீடிக்கும்.
ஆகையினால், நிதானமான பல வருடங்கள் நீடிக்க கூடிய தீர்வினைப் பெற்றுக்கொள்ள வழி வகுக்க வேண்டுமென்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் வடக்கு முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.